விஜய் ரசிகர்கள் மத்தியில் 'பீஸ்ட்' அலை ஓய்ந்து இப்போது 'தளபதி 66' அலை எழுந்துள்ளது. தெலுங்கில் பல வெற்றிப் படங்களைத் தந்துள்ள இயக்குநர் வம்சி பைடிபள்ளி இப்படத்தை இயக்குகிறார்.
ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு, தொழில்நுட்பப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சுவரொட்டி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இயக்குநரும் விஜய்யும் பேசிக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் விஜய்யும் இயக்குநர் அட்லியும் மீண்டும் இணையப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய மூன்று படங்களுமே வசூல் ரீதியில் எந்தக் குறையும் வைக்கவில்லை. கலவையான விமர்சனங்கள் வெளிவந்த போதும் அட்லி எதையும் கண்டுகொள்ளவில்லை. அவரது பரபரப்பான திரைக்கதை விஜய் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.
இவர் இயக்கிய 'பிகில்' படத்தில் ராயப்பன், மைக்கேல் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் விஜய். இதில் ராயப்பன் கதாபாத்திரம் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்நிலையில், 'பிகில்' ராயப்பன் கதையை மட்டும் வைத்து ஒரு முழு படம் உருவானால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் என்று ரசிகர் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட, அதற்குப் பதிலளித்துள்ள அட்லி, "அப்படிச் செய்துவிட்டால் ஆயிற்று," என்று குறிப்பிட்டுள்ளார்.
அட்லியின் இந்தப் பதிலால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் விஜய்யும், அட்லியும் இணைந்து பணியாற்ற உள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இவரின் இந்த பதிவு, இருவரும் இணைந்து பணிபுரிய இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
வம்சி இயக்கும் படத்தில் அடிதடியும் அதிரடியும் அதிகம் இருக்காதாம். மாறாக, 'பூவே உனக்காக' படத்தைப் போல் மென்மையான காதலும் குடும்ப உணர்வும் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே, இதையடுத்து வெளியாகும் படம் அதிரடியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் மீண்டும் அட்லியுடன் கூட்டணி அமைக்க விஜய் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
'தெறி' படத்தின் படப்பிடிப்பில் அட்லி, விஜய்.

