அண்மைய கருத்துக்கணிப்பின்படி, இந்திய அளவில் மிகப்பிரபலமாக உள்ள நடிகர்களின் பட்டியலில் விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.
அஜித்துக்கு ஆறாம் இடம்தான் கிடைத்துள்ளது. ஊடக நிறுவனம் ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டது. இதே பட்டியலில் நடிகர் சூர்யா ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
நடிகைகளில் இம்முறை சமந்தாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஆலியா பட் இரண்டாவது இடத்திலும் நயன்தாரா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். காஜல் அகர்வாலுக்கு நான்காம் இடத்தையும் தீபிகா படுகோன், ராஷ்மிகா, அனுஷ்கா, கேத்ரினா கைஃப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷும் பூஜா ஹெக்டேவும் முறையே ஒன்பது, பத்தாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
இம்முறை திரையுலகில் முன்னிலை வகிக்கும் பட்டியலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஏழு பேருக்கு இடம் கிடைத்துள்ளது. பாலிவுட் நடிகைகளில் மூவர் மட்டுமே பட்டியலில் உள்ளனர்.
நடிகர்களில் ஜூனியர் என்டிஆர் இரண்டாம் இடத்திலும் அல்லு அர்ஜுன் நான்காம் இடத்திலும் உள்ளனர். ஐந்தாம் இடத்தில் அக்ஷய் குமார், ஏழாம் இடத்தில் யஷ், எட்டாம் இடத்தில் ராம் சரண் உள்ள நிலையில், மகேஷ்பாபுவுக்கு பத் தாம் இடம்தான் கிடைத்துள்ளது. இந்த அய்வில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகர், நடிகையரும் கவனத்தில் கொள்ளப்பட்டனர்.
அண்மைக்காலமாக 'பான் இந்தியா' வகைப் படங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையுலக ரசிகர்களும் பார்ப்பதற்கு ஏற்ற படைப்பாக இருப்பின் அதை 'பான் இந்தியா' படம் என்று குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட சில தெலுங்குப் படங்களில் இந்தி, தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் பல இடங்கள் இதே ரீதியில் உருவாகி வருகின்றன.
இதன் காரணமாக தென்னிந்திய நாயகர்களும் நாயகிகளும் இப்போது நாடறிந்த கலைஞர்களாக மாறிவிட்டனர். தென்னிந்திய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு வட இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு படங்கள் பலவும் இப்போது வட மாநிலங்களில் பரவலாகத் திரையிடப்படுகிறது. ஓடிடி தளங்களில் இந்த நாயகர்களின் பழைய படங்களை வடஇந்திய ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
அண்மையில் வெளியீடு கண்ட 'புஷ்பா', 'ஆர்ஆர்ஆர்', 'பீஸ்ட்', 'கேஜிஎஃப்-2' ஆகிய படங்களின் வடஇந்திய வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததாகக் தகவல்.
இதன் எதிரொலியாக தென்னிந்திய நாயகர்களின் சந்தை மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதை உறுதி செய்யும்விதமாக அண்மைய ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன. விஜய்க்கு முதலிடம் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறுவிதமாக பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பட்டியலில் தென்னிந்திய நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் இருந்தாலும், வசூல், சம்பளம் போன்ற விஷயங்களில் இந்தி திரையுலகத்தினர்தான் முன்னணியில் உள்ளனர். 'பாகுபலி', 'கேஜிஎஃப்' போன்ற சில தெலுங்குப் படங்களும் சாதித்துள்ளன. தமிழில் இதுவரை அப்படிப்பட்ட பிரம்மாண்ட படங்களை இதுவரை உருவாக்க முடியவில்லை.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படம் இந்தக் குறையைப் போக்கும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த கலைஞர்கள் இப்படத்துக்குப் பங்களித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமம் பெருந்தொகைக்கு விலைபோயிருக்கிறது.
, :

