கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை ஜூன் மாதத் தொடக்கத்தில் வெளியிடலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் திட்டத்தை மாற்றிவிட்டனர்.
வெளிநாட்டில் சிகிச்சை பெற இருக்கும் தந்தையுடன் சிம்புவும் செல்ல இருக்கிறார். அதனால் அவர் நாடு திரும்பிய பிறகுதான் மற்ற நிகழ்வுகளுக்கு திட்டமிடப் போகிறார்களாம்.
இதற்கிடையே, எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த படத்தின் தயாரிப்புத்தரப்பு அசந்து போனதாகத் தகவல். அந்த அளவுக்கு சிம்புவும் கௌதம் மேனனும் மிகச் சிறப்பாக பணியாற்றி இருப்பதாக பாராட்டு கிடைத்துள்ளது.
இந்நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெறுவதில் கடும் போட்டி நிலவுவதாகத் தகவல். ஒருவரையொருவர் முந்திக்கொண்டு விலையை உயர்த்தி வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
"சரியாகச் சொல்வதானால், சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே மிக அதிக தொகைக்கு வியாபாரமான படமாக 'வெந்து தணிந்தது காடு' இருக்கும்.
"சினிமா சந்தையில் அவரது மவுசு மீண்டும் உயர்வதற்கு 'மாநாடு' பட வெற்றிதான் காரணம்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காலத்துக்கும் நீ வேணும்' எனத் தொடங்கும் பாடல் அண்மையில் யூடியூப்பில் வெளியானது. இதுவரை அப்பாடல் ஒரு கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்பாடலை தாமரை எழுதியுள்ளார். இதையடுத்து, மேலும் ஒரு பாடலை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயட் லோஹர் என்ற புதுமுகம் நடிக்கிறார்.

