விவசாயக் குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திருக்கிறார் சந்திரிகா ரேவதி.
பார்த்திபன், கெளதம் கார்த்திக் நடித்த 'யுத்த சத்தம்' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அடுத்து நடிகர் மயில்சாமியின் மகன் அன்புவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும், முன்னணி நடிகர் ஒருவரின் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளாராம். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்கிறார்.
சந்திரிகா ரேவதிவின் சொந்த ஊர் கோவை. பட்டப்படிப்பு முடிக்க வேண்டும், ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று சம்பளம் வாங்கி குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்பதுதான் இவரது மனநிலையாக இருந்துள்ளது.
"கடந்த 2018ஆம் ஆண்டு சென்னையில் இருந்த ஒரு தோழியைச் சந்திக்க வந்தேன். அவர் மாடலிங் துறையில் இருந்தார். அவரைச் சந்தித்த பிறகுதான் நான் நடிகையாக உருமாறிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது.
"என் தோழி பங்கேற்ற புதுப்படத்துக்கான நடிகர் தேர்வுக்கு நானும் துணைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த சிலர், 'நீங்களும் நடிக்கலாமே' என்று சொல்லி என்னையும் தேர்வில் பங்கேற்க வைத்தனர். அதன் மூலம் மலேசியாவில் தயாரிக்கப்பட்ட 'நான் கபாலி அல்ல' இணையத் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
"போஸ் வெங்கட், நிரோஷா, மலேசிய நடிகை ஜாஸ்மின் ஆகியோருடன் இணைந்து நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். கேமரா முன்பு நின்ற முதல் அனுபவம் அதுதான்.
"படப்பிடிப்புக்கு முன்பு ஒத்திகை பார்த்தனர். அதனால் ஓரளவு சமாளித்துவிட்டேன். எனினும், அந்தத் தொடர் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது," என்று சொல்பவருக்கு, அதன் பிறகுதான் மனதில் சினிமா ஆசை எட்டிப்பார்த்ததாம்.
நாம் ஏன் சினிமாத்துறையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்ற கேள்வி எழுந்ததும், உடனே தனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்திருக்கிறார். அதன் பிறகு சென்னைக்கும் இடம்பெயர்ந்துள்ளார்.
"எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தேன். என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் கடினம் என்று ஒருசிலர் என் காதுபடவே பேசினார்கள். அதனால் மனதுக்குள் சிறிய அச்சம் எட்டிப் பார்த்தது.
"ஆனாலும் முயற்சி செய்வதை நிறுத்தக்கூடாது என்பதில் முடிவாக இருந்தேன். 'யுத்த சத்தம்' படத்தைப் பொறுத்தவரை ஓடும் பேருந்தில் ஏறிய கடைசி பயணி மாதிரிதான் அந்தப் பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் இயக்குநர் எழிலைச் சந்தித்தபோது நடிகர், நடிகையர் தேர்வு முன்பே முடிந்துவிட்டது என்றார். ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டேன்.
"ஆனால், அடுத்த மூன்று நாள்களிலேயே அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதுவும் நாயகிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் இயக்குநர். படம் முழுக்க பார்த்திபன் சாருடன் பயணிப்பேன்.
"அவரைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. வெளியே நகைச்சுவையாக சிரித்துப் பேசுவார். ஆனால் படப்பிடிப்பு, நடிப்பு என்று வந்துவிட்டால் முழுக்கவனமும் அதில்தான் இருக்கும். என்னைப்போன்ற புதுமுகம் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் உழைப்போமோ, அதேபோல் அவரும் உழைக்கிறார்.
"இந்தப் படத்தின் மூலம்தான் நடிப்பு என்றால் என்னவென்று கற்றுக்கொண்டேன். யதார்த்தமாக நடிப்பது எப்படி என்று அவர்தான் சொல்லிக்கொடுத்தார். பத்து படங்களில் நடித்த அனுபவத்தை ஒரே படத்தில் பெற்றுவிட்டேன்.
"இயக்குநர் எழில் மிகவும் மென்மையானவர். அனைத்து கலைஞர்களுடன் அன்பாகப் பேசித்தான் வேலை வாங்குவார். அவர் என்னிடம் பேசுகிறார் என்றால், என் அருகில் இருப்பவர்களுக்குக்கூட எதுவும் கேட்காது. எனக்கு மட்டும்தான் கேட்கும். அந்த அளவு மரியாதையாக நடத்துவார்," என்று சொல்லும் சந்திரிகாவுக்கு, 'அறம்', 'அருவி' போன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க விருப்பமாம்.
இவர் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகையாம். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஏதாவது பதிவிட்டபடி இருக்கிறார்.
இன்ஸ்டகிராமிலும் டுவிட்டர் தளத்திலுமாகச் சேர்த்து இருநூறாயிரம் பேர் சந்திரிகாவைப் பின் தொடர்கிறார்கள்.
"குறைவான படங்களில் நடித்தாலும், ரசிகர்கள் நம்மை மனதில் வைத்திருக்க வேண்டும். அது போதும்," என்கிறார் சந்திரிகா.

