'தி லெஜண்ட்' படத்தின் இசை, முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
படத்தின் நாயகன் சரவணன், நாயகி ஊர்வசி ரௌடேலா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இரட்டை இயக்குநர்கள் ஜேடி, ஜெர்ரி உள்ளிட்ட படக்குழுவினரும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே வெளிப்படையாக சில விஷயங்களையும் பட அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசும்போது, படத்தின் கதை தமக்குப் பிடிக்கவில்லை என்று இயக்குநர்களிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
"நான் இவ்வாறு மறுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இயக்குநர்கள் இருவரும் என்னை மீண்டும் சந்தித்தனர். இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் கதையில் மாற்றங்கள் செய்திருந்தனர். அதன்பிறகு தயக்கமின்றி இசையமைக்க ஒப்புக்கொண்டேன்.
"லெஜண்ட் சரவணன் எனது நண்பர். அவருடன் 12 ஆண்டுகளாக நட்பு டன் பழகி வருகிறேன். இப்படத்தில் அவர் நாயகனாக நடிக்க இருப்பதாகக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் நடித்தால் படத்தைப் பார்க்க யார் வருவார்கள் என்றும்நினைத்தேன். ஆனால் இந்தப் படத்துக்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படத்தின் மிகப்பெரிய பலமே படக்குழு தான்," என்றார் ஹாரிஸ் ஜெயராஜ்.
படத்தின் நாயகி ஊர்வசி ரௌடேலா பேசும்போது, தாம் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தமது நீண்ட நாள் விருப்பம் என்றும் கூறினார்.
"எனக்கு ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும். அதேபோல் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி, அதன் தலைவர் டோனியின் தீவிர ரசிகை. அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் நாயகன் சரவணனும் எனக்குப் பிடித்தமானவர்களில் ஒருவர்.
"என்னைத் தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்திய இரட்டை இயக்குநர்கள் ஜேடி, ஜெர்ரிக்கு நன்றி. அதிலும் இதுபோன்ற பிரம்மாண்ட படைப்பின் மூலம் தமிழ் ரசிகர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி," என்றார் ஊர்வசி.
அண்மையில் கான் திரைப்பட விழாவில் பங்கேற்று சிவப்புக் கம்பளத்தில் கவர்ச்சி நடைபோட்டு அசத்திய அவர், சென்னை நிகழ்ச்சியில் குடும்பப்பாங்கான தோற்றத்துடன் மேடையேறினார்.
காஞ்சிபுரம் மஞ்சள் புடவை, நெத்திச்சுட்டி, தோடுகள் என்று அச்சு அசலாக தென்னிந்தியப் பெண்ணாகக் காட்சியளித்தார்.
தற்போது பார்பரா பயோலோவஸ் இயக்கத்தில் நடித்து வருபவர், 'இன்ஸ்பெக்டர் அவிநாஷ்', 'பிளாக் ரோஸ்', 'திருட்டுப் பயலே-2' இந்திப் பதிப்பு ஆகியவற்றில் நடிக்கிறார்.
இதையடுத்து பேசிய படத்தின் நாயகன் சரவணன், தமது முதல் படத்தில் காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் இருக்கும் என்றார்.
"இந்தப் படம் இந்திய திரையுலகுக்கே ஓர் எடுத்துக்காட்டாக அமையும். பெரிய வெற்றிப் படமாகவும் இருக்கும். இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். அதற்கேற்ப கதையும் திரைக்கதையும் அமைந்துள்ளன," என்றார் சரவணன்.
தமக்கு திரையுலகில் ரஜினியும் விஜய்யும்தான் முன்மாதிரி என்று குறிப்பிட்ட அவர், தொடர்ந்து நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
"எதிர்காலத்தில் நல்ல கதைகள் அமைவதை பொறுத்து நடிப்பைத் தொடர்வது குறித்து முடிவெடுப்பேன். நல்ல கதை அம்சங்கள் கொண்ட இயக்குநர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன்.
"என்னைப் பற்றி பலர் நிறைய விமர்சனம் செய்வதாகச் சொல்கிறார்கள். அவ்வாறு விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துகள்.
"நடிகர் விவேக் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைச் சிறப்பாக படமாக்கி உள்ளோம்," என்றார் சரவணன்.
செய்தியாளர்கள் எழுப்பிய மேலும் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், வெற்றியைக் குறிவைத்துதான் பெரும் பொருள்செலவில் தனது அறிமுகப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதாகக் குறிப்பிட்டார்.
வெற்றிகரமான தொழிலதிபர் என்று பெயரெடுத்துள்ள நிலையில், திரையுலகில் தமக்கென எந்தவித இலக்கையும் நிர்ணயிக்கவில்லை என்றும் சரவணன் மேலும் தெரிவித்தார்.
, :
ஊர்வசி ரௌடேலா

