திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

 நடிகை லாஸ்லியாவின் இன்ஸ்டகிராம் பக்கத்தை சிலர் முடக்கிவிட்டனர். மேலும், அவர் பிறருடன் பகிர விரும்பாமல் தனது கணக்கில் வைத்திருந்த சில புகைப்படங்களையும் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.

இதனால் தாம் வேதனை அடைந்துள்ளதாகவும் முடக்கப்பட்ட இன்ஸ்டகிராம் பக்கத்தை மீட்டு விட்டதாகவும் லாஸ்லியா தெரிவித்துள்ளார்.

மேலும், இணைய ஊடுருவிகள் வெளியிட்ட அனைத்து புகைப்படங்களையும் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

 'சார்பட்டா பரம்பரை' பட நாயகி துஷாரா விஜயன் விடுமுறையைக் கழிக்க துபாய் சென்றுள்ளார்.

அங்கு தாம் 'ஸ்கை டைவிங்' செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங் களைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

"இந்த சிலிர்ப்பான அனுபவத்தைப் பெற சில நிமிடங்கள் துணிச்சலுடன் இருந்தால் போதும். உயரப்பறந்து ரசிக்கலாம். இதுபோன்ற சாகசங்களை பலமுறை செய்ய விரும்புகிறேன்," என்கிறார் துஷாரா. இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிக்கிறார்.

 'பிரேமம்' மலையாளப் படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படத்தின் மூலம் புகழ்பெற்ற அனுபமா பரமேஸ்வரன் (படம்), சாய் பல்லவி, மடோனா ஆகிய மூன்று நடிகைகளும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் 'பிரேமம்' படத்தின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

அனுபமா படத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். 'பிரேமம்' என்ற தலைப்பு, திரையில் தோன்றும் காட்சியைப் பகிர்ந்துள்ளார் மடோனா.

அனுபமா இந்தப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். அவரது சிகை அலங்காரமும் தோற்றமும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.

 இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 80 வயதானதை அடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோவிலில் சதாபிஷேகம் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, கங்கை அமரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.