அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி மீண்டு வந்துள்ளார் நடிகர் போண்டா மணி.
இந்நிலையில், திரையுலகத்தினர் அவரை அறவே கண்டுகொள்ளவில்லை என்று ஊடகத்தில் செய்தி வெளியானதை அடுத்து, நடிகர் மயில்சாமி உள்ளிட்டவர்கள் தேடி வந்தனராம்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு மருத்துவமனையை நாடிச் சென்றதாகச் சொல்கிறார் போண்டா மணி. நடிகர் விவேக்கின் நண்பரான 'செல்' முருகன்தான் முதலில் மருத்துவமனைக்குத் தேடி வந்து போண்டா மணியைச் சந்தித்துள்ளார். மருத்துவர்களிடம் பேசுவதில் தொடங்கி பணம் கொடுத்தது வரை பல்வேறு உதவிகளைச் செய்தார்.
"உடம்பு முடியாத சமயத்தில்தான் இன்னமும் என் மீது பாசம் வைத்துள்ள மனிதர்கள் உள்ளனர் என்பதை உணர்ந்தேன். அந்த மகிழ்ச்சியிலேயே விரைவில் மீண்டு வந்துவிட்டேன்.
"வடிவேலு நடிக்காத காலகட்டத்தில் அவரது குழுவில் இருந்த நான் உட்பட அனைவருமே வேலை இல்லாமல் சிரமப்பட்டோம். அது அனைவருக்கும் தெரிந்திருந்த போதிலும், யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. இப்போது பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம் என்றாகிவிட்டது. முன்பு சினிமாவில் நடிப்பவர்களுக்கு மரியாதை இருந்தது. இப்போது அப்படி இல்லை. சின்னத்திரை இருப்பதால் எங்களைப் போன்ற சிலருக்கு பிழைப்பு நடக்கிறது.
"நான் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். எல்லா கதாநாயகர்களும் எங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும். நாங்கள் திரையுலகில் நீடிக்க வாய்ப்பு வேண்டும்.
"எனக்கு யாரும் உதவவில்லை என்று ஊடகத்தில் செய்தி வெளியானதும், நடிகர் மயில்சாமி ஓடி வந்து, 'நீங்கள் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது' என்று அறிவுறுத்தி பணமும் கொடுத்தார். அதன் பிறகு இயக்குநர் பி. வாசு, நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார் ஆகியோரும் பண உதவி செய்தனர்.
"செல் முருகனை விவேக்குடன் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் தேடி வந்து கைகொடுப்பார் என எதிர்பார்க்கவே இல்லை.
"ரஜினி, விஜய்யின் உதவியாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர். அஜித்துக்கு என்னை மிகவும் பிடிக்கும். அவருடன் ஆறு படங்கள் நடித்துள்ளேன். இவர்கள் எல்லாம் எங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்தால் உதவியாக இருக்கும்.
அண்மையில் ஒரு படப்பிடிப்பின்போது நான் சாக்கடையில் விழுவது போன்ற காட்சியை எடுத்தனர். ஆனால், அதற்கான அரங்கை அமைக்க முடியவில்லை. படக்குழு என்ன செய்வது என யோசித்தபோது அங்கிருந்த உண்மையான சாக்கடையில் விழுகிறேன் என்றேன். ஆனால் காட்சியை எடுத்து முடிக்க நீண்ட நேரமாகிவிட்டது. அன்று இரவு லேசான மூச்சுத்திணறலில் தொடங்கி, பிறகு நிலைமை மோசமாகிவிட்டது. அதனால்தான் சிசிக்சை பெற்றேன்," என்கிறார் போண்டா மணி.

