ரஜினியின் 169வது படத்துக்கு 'ஜெயிலர்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. அதற்கான முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் ரஜினியுடன் இணைகிறார். மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத் தலைப்பை வைத்துப் பார்க்கும்போது ரஜினி இதில் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தோன்று கிறது என சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டுள்ளனர்.
உடல் பாகங்களை அழகுபடுத்துவதாகக் கூறிக்கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்வது வீண் வேலை என்கிறார் ராதிகா ஆப்தே. திரையுலகில் அறிமுகமான புதிதில் தனது கன்னம், கால்கள், தொடைப் பகுதியை அழகாக மாற்றி அமைக்க அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு பலர் அறிவுரை கூறினார்களாம். ஆனால் தமக்கு அதில் உடன்பாடு இல்லை என்கிறார் ராதிகா. "இதுபோன்ற ஆலோசனைகளைக் கேட்டு எனக்கு கோபம்தான் வந்தது. அதன் பிறகு எனது உடலை இன்னும் அதிகமாக நேசிக்கத் தொடங்கினேன்," என்கிறார் ராதிகா ஆப்தே.
தமிழில் முன்புபோல் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார் ஹன்சிகா. இந்நிலையில் 'கலாபக்காதலன்' படத்தை இயக்கிய இகோர் இயக்கும் புதிய படத்தில் ஹன்சிகாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரி வில்லனாக நடிக்க, ஜனனி துர்கா முக்கிய கதா பாத்திரத்தை ஏற்றுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ் முரசு 12ஆம் பக்கத்தில் இடம்பெற்றிருந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமண வரவேற்பு நிகழ்வு குறித்த செய்திக்கு கீழ்கண்ட படம் இடம்பெற்றிருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம்.

