இந்தியா முழுவதும் பேசப்படும் படமாக உருவாகி உள்ளது '777 சார்லி'. நேரடிக் கன்னடப் படமாக இருந்தாலும் ஒரே சமயத்தில் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்கவே செல்லப் பிராணிகளின் அன்பு என்பது ஒரே மாதிரியானது, பொதுவானது. இந்தக் கருத்தை மையமாக வைத்துத்தான் '777 சார்லி' படத்தை உருவாக்கி உள்ளனர்.
நாயகனுக்கும் அவனது செல்லப் பிராணிக்கும் இடையேயான நிபந்தனையற்ற அன்பை விவரிக்கும் படைப்பு. இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற படமாக இருக்கும் என நம்புவதாகச் சொல்கிறார் இயக்குநர் கிரண்ராஜ்.
"777 என்றால் உலக அளவில் அதிர்ஷ்டம், ஜாக்பாட், புனிதம் என்று பலவற்றின் குறியீடாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் சார்லி ஒரு செல்ல நாய்க்குட்டி.
"நாயோ, பூனையோ, எலியோ... ஒரு வாயில்லா ஜீவன் ஒருவரைத் தேடி வந்தால் அது அவரது அதிர்ஷ்டம். அதைத்தான் '777 சார்லி' சொல்கிறது. இன்றுள்ள குழந்தைகளுக்கு விலங்குகள் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்பதை மிக ஆழமாக, ரசிக்கத்தக்க வகையில் சொல்லிக் கொடுக்கும் படம் இது," என்கிறார் கிரண்ராஜ்.
தற்போது இந்திய அளவில் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படும் தலைப்புகள், தகவல்கள் பட்டியலில் '777 சார்லி' படமும் இடம்பிடித்துள்ளது. சரி, படத்தில் அப்படியென்னதான் இருக்கிறது?
"முழுமையான, எல்லையில்லா அன்பைக் கொடுத்தால் என்ன கிடைக்கும் என்பதை இந்தப் படம் விவரிக்கிறது. இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து வந்துள்ளனர். எனவே அவர்களுடைய மன அழுத்தத்தைப் போக்கும் படைப்புகள்தான் இப்போது தேவை.
"ஆனால் இப்போது வெளிவரக்கூடிய படங்கள் அடிதடி, வன்முறையைத்தான் கதைக்களமாகக் கொண்டிருக்கின்றன. அதனால் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் அன்பு, அதன் முக்கியத்துவம் குறித்து பேச வேண்டியுள்ளது. அந்தப் பணியைத்தான் எங்கள் படம் கச்சிதமாகச் செய்திருக்கிறது," என்கிறார் படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். இயக்குநர் கிரண்ராஜின் கடும் உழைப்புதான் தம்மை துணிச்சலுடன் களமிறங்க வைத்ததாகச் சொல்கிறார்.
"இந்தப் படத்தின் கரு ஒரு நாய்தான். அந்தச் செல்லப்பிராணியை தேர்வு செய்வதற்கு மட்டுமே சுமார் இரண்டு ஆண்டுகள் அலைந்துள்ளார் கிரண்ராஜ்.
"இந்தக் கதையை சுமார் எட்டு ஆண்டுகள் செதுக்கி உள்ளார். ஒவ்வொரு காட்சியையும் மேம்படுத்திக் கொண்டே இருந்துள்ளார்.
"ஐநூறுக்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளைப் பார்த்து, கடைசியில் சார்லியைத் தேர்வு செய்தார். சார்லி எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.
"தற்போது வெளியீடு கண்ட ஐந்து மொழிகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் பெரும் வெற்றி பெறும் என நம்புகிறோம்," என்கிறார் இயக்குநர் கிரண்ராஜ்.

