தனது உடல் எடை கூடிவிட்டது என்றும் தொப்பை வந்துவிட்டது என்றும் நடிகை லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் அடிக்கடி பதிவிட்டு வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது 'சிப்பாய்' என்ற படத்தில் நடித்து வருகிறார். லட்சுமியின் புதிய காணொளிப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலர், "உடல் எடை கூடினாலும் நீங்கள் எப்போதுமே அழகுதான்," எனப் பின்னூட்டமிட்டுள்ளனர். உடற்பயிற்சி, நடனப் பயிற்சி மேற்கொள்ளாததால்தான் லட்சுமி மேனனின் உடல் எடை அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நடிகர் மாதவன் இயக்கி உள்ள 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தின் முன்னோட்டக்காட்சித் தொகுப்பு உலகின் மிகப்பெரிய விளம்பரப் பலகையில் ஒளிபரப்பானது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ள, இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் படக்குழுவினர் 12 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், உலகின் மிகப்பெரிய விளம்பரப் பலகையான 'டைம்ஸ் ஸ்கொயர்' பகுதியில் உள்ள 'நாஸ்டாக்' விளம்பரப் பலகையில் 'ராக்கெட்ரி' படத்தின் முன்னோட்டக்காட்சித் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அப்போது படக்குழுவினருடன் விஞ்ஞானி நம்பி நாராயணன் உடனிருந்தார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தில் இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கரும் இணைந்து பணியாற்றினர். இந்நிலையில், 'ஆர்ஆர்ஆர்' புகழ் ராம்சரணை நாயகனாக வைத்து வெங்கட்பிரபு இயக்க உள்ள புதிய படத்திற்கு இருவரும் மீண்டும் இணைந்து இசையமைக்க உள்ளனர்.

