'சூரரைப் போற்று' படத்தின் வெற்றிக்குப் பிறகு அபர்ணா பாலமுரளி தமிழில் பெரிதாக ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரைத் தமிழ்ப் படங்களில் அறவே காணோம்.
இந்நிலையில், 'வீட்ல விஷேசம்' படம் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களைச் சந்திக்கிறார் அபர்ணா.
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'பதாய் ஹோ' திரைப்படத்தைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்டுள்ள படம் இது.
சில நடிகைகள் மறுபதிப்பு செய்யப்படும் படங்களில் நடிக்கத் தயங்குவதாகக் கூறப்படும் நிலையில், அபர்ணா அதுகுறித்து தாம் அதிகம் யோசிக்கவில்லை என்கிறார்.
"இந்தப் படத்தை இந்தியில் நான் பார்த்திருக்கிறேன். அதில் சன்யா மல்ஹோத்ரா நாயகி. அவரைப் போன்று நடிக்காமல் வேறு என்ன வித்தியாசமாக செய்யலாம் என்று யோசித்தேன். அதன்பிறகு சில விஷயங்களை முடிவு செய்து, அவற்றைக் கடைப்பிடித்தேன்.
"இந்திப் பதிப்புக்கும் தமிழுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். குறிப்பாக, வசனங்கள் எல்லாம் மிகவும் எளிமையாக இருக்கும் என்பதுடன், தமிழுக்கு ஏற்றாற் போல் காட்சிகளை அமைத்துள்ளனர்," என்கிறார் அபர்ணா.
'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு மீண்டும் 'வீட்ல விஷேசம்' படத்தில் ஊர்வசியுடன் இணைந்து நடித்தது சுவாரசியமாக இருந்ததாம்.
சூர்யா படத்தில் நன்கு முதிர்ச்சியான தாயாக நடித்திருப்பவர், இம்முறை மிகவும் அப்பாவியான, குறும்புத்தனம் நிறைந்த அம்மாவாக நடித்துள்ளாராம்.
"எந்தக் காட்சியாக இருந்தாலும், அதை மெருகேற்றுவதில் ஊர்வசி மேடம் ரொம்ப கெட்டிக்காரர். அவருக்கும் சத்யராஜ் சாருக்கு மான உடல்மொழி கச்சிதமாக அமைந்துள்ளது. இருவரும் வரும் காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் கவரும்," என்று சொல்லும் அபர்ணா, 'மகேஷிண்ட பிரதிகாரம்' படம்தான் தமது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்கிறார்.
மலையாளத்துக்குப் பிறகு பின்னாள்களில் அந்தப் படத்தை தமிழிலும் தெலுங்கிலும் மறுபதிப்பு செய்தனர். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று தாம் எதிர்பார்க்கவே இல்லை என்கிறார்.
"அந்தப் படத்தில் நடித்து முடித்த மறுநாளே குஜராத் மாநிலத்துக்குச் சென்றுவிட்டேன். படத்தின் விளம்பர நிகழ்வுகளில்கூட பங்கேற்கவில்லை. அந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை யூகிக்க இயலாத வகையில், கடைசி வரையில் ரகசியம் காத்தனர்.
"எதிர்பார்த்தபடியே அந்தப் பாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு. வாய்ப்பு இருந்ததால் அந்தப் படத்தின் இயக்குநருடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன்," என்கிறார் அபர்ணா.
'தங்கம்' என்ற மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார் அபர்ணா, அடுத்து மலையாளத்திலேயே 'பத்மினி' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் அசோக் செல்வனுடன் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடிக்கிறார்.
"இப்போது 'சூரரைப் போற்று' படத்தின் இந்திப் பதிப்பு தயாராகி வருகிறது. இதில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். சுதா கொங்குராதான் இயக்குநர்.
"பெரும்பாலானவர்கள் தமிழ்க் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள். மீண்டும் அதே படக்குழுவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்," என்று சொல்லும் அபர்ணா, நல்ல பாடகி என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
அண்மையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர், அந்நிகழ்ச்சியில் பாடி சிறார்களைக் கைதட்டி பாராட்டி குதூகலித்தார். இந்த அளவு எளிமையாக இருக்கும் ஒருசில நடிகைகளில் அபர்ணாவும் ஒருவர் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
"எனக்கும் இசையில் ஆர்வம் அதிகம். சிறார்கள் இவ்வளவு திறமையுடன் இருப்பதைப் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கிறது. அதனால்தான் அந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு பாடலைப் பாடினேன்," என்கிறார் அபர்ணா.
, :

