தமது திரை வாழ்க்கையில் முழு மனநிறைவை ஏற்படுத்திய படங்களின் பட்டியலில் 'வீட்ல விசேஷம்' படம் இடம்பெற்றுள்ளதாகச் சொல்கிறார் ஊர்வசி.
இன்றைய தேதியில் ஒரு கலைஞருக்கு மதிப்புமிக்க கதை, தெளிவான பார்வை கொண்ட நல்ல திரைப்பட இயக்குநர்கள், அற்புதமான சக நடிகர்கள் கொண்ட ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிகவும் அரிதாகவே கிடைக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'வீட்ல விசேஷம்' தமக்கு அப்படிப்பட்ட ஒரு படமாக அமைந்தது என்றும் கூறுகிறார்.
"நான் மலையாளத்தில் இதே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த படத்தினுடைய படப்பிடிப்பின் ஒவ்வொரு நொடியும் என்னை உற்சாகப்படுத்தியது.
"சத்யராஜ் சாருடன் திரையைப் பகிரும் வாய்ப்பு மிக முக்கியமானது. நல்ல நடத்தை, நடிப்பின் மூலமாக மற்றவர்களை ஈர்க்கும் திறமை பெற்ற நடிகர்களுடன் பணியாற்றுவதை நான் எப்போதும் ரசிப்பேன். அப்படிப்பட்ட ஒரு நடிகர் சத்யராஜ்," என்கிறார் ஊர்வசி.
இந்தப் படத்தில் தாம் இணைவதற்கு ஆர்.ஜே.பாலாஜிதான் காரணம் என்று குறிப்பிடுபவர், அவரது படங்களில் தமக்கு குறிப்பிடத்தக்க, தனித்துவமான பாத்திரங்கள் அமைவதாகச் சொல்கிறார்.
"அண்மைக்காலமாக குறிப்பிட்ட சில தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக மட்டுமே திரைப்படங்கள் உருவாகின்றன. ஆனால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதுடன் அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும்," என்கிறார் ஊர்வசி.

