'ஜெய்பீம்' படத்துக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் நன்கு அறிமுகமாகிவிட்டார் லிஜோ மோல்.
'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். மலையாளத்தில் முன்னணி நடிகை என்றாலும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் அவ்வப்போது சென்னையில் முகாமிடுகிறார்.
திரையில் மட்டுமல்ல, நேரிலும் லிஜோ மோலிடம் ஒருவித எளிமையைக் காண முடிகிறது. இயல்பாகப் பேசுகிறார். சில விஷயங்களை வெளிப்படையாகப் போட்டு உடைக்கிறார்.
அறிமுகமான புதிதில் தமிழில் பேச சிரமப்பட்டவர், இப்போது சரளமாக அழகுத் தமிழில் பேசுவது உற்சாகம் அளிக்கிறது.
"ஒரு மொழியைப் பிழை இல்லாமல் பேசினால் போதும், அதுவே வெற்றிதான். உண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் பேச வராது. பள்ளியில் படிக்கும்போது தமிழும் ஒரு பாடம் என்பதால் ஓரளவு எழுதவும் வாசிக்கவும் தெரியும்.
"ஆனால் 'ஜெய்பீம்' படத்துக்காக இருளர் சமூக மக்களுடன் பேச வேண்டியிருந்தது. அதற்காக தமிழில் பேச கற்கத் தொடங்கினேன். அந்தப் படம் முடிவதற்குள் தமிழ் ஓரளவு வசமாகியுள்ளது.
"நான் நடித்த காட்சிகளுக்கு நானே பின்னணிக் குரல் கொடுக்க வேண்டும் என இயக்குநர், தயாரிப்பாளர், சூர்யா என மூவரும் இடைவிடாமல் ஊக்கம் அளித்தனர்.
"பின்னணி பேசிய பிறகு தமிழ் கொஞ்சம் சரளமாகிவிட்டது," என்று சொல்லும் லிஜோ மோலுக்கு பூர்வீகம் கேரளா என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தந்தை விவசாயி, தாயார் அரசு ஊழியர். ஒரு தங்கை உள்ளார்.
அம்மா பெயர் லிசம்மா. அப்பா பெயர் ஜோஸ். இருவரது பெயர்களின் முதல் எழுத்தை சேர்த்து லிஜோ என்று தமக்குத் தாமே பெயர் சூட்டிக்கொண்டுள்ளார் லிஜோ.
பட்டப்படிப்பை முடித்த கையோடு ஊடகத்துறையில் பணியாற்ற விரும்பினாராம். ஆனால் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்கள் அந்த வேலையே வேண்டாம் என்று முடிவெடுக்க வைத்ததாம்.
"அதன் பிறகு ஊடகத்துறை மீதான ஈர்ப்பு முடிவுக்கு வரவில்லை. அதுசார்ந்த பட்ட மேற்படிப்பில் சேர்ந்த போதுதான் திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது.
"தமிழில் அறிமுகமான வேகத்தில் நான்கைந்து படங்களில் நடிப்பேன் என்றுதான் என் தோழிகள் எதிர்பார்த்தனர். ஆனால் எனக்கு முப்பது வயதாகிவிட்டது. அதனால் திருமணத்துக்குப் பிறகுதான் நடிப்பு என்று வீட்டில் முட்டுக்கட்டை போட்டுவிட்டனர்.
"முதுகலைப் படிப்பின்போதுதான் அருணைச் சந்தினேன். அவர்தான் ஒரு குறும்படத்தில் நடிக்கக் கேட்டார். ஆனால் மறுத்துவிட்டேன். சுமார் ஐந்து ஆண்டுகள் காதலை வெளிப்படுத்தாமலேயே காதலர்களாக இருந்தோம். பிறகு வீட்டில் விவரம் தெரிவிக்க, அது திருமணத்தில் முடிந்துவிட்டது," என்கிறார் லிஜோ.
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு அதன் முழுக்கதை, வசனங்களை அச்சிட்டு தரச் சொல்லி, அதை ஒருமுறைக்கு மூன்று முறை படித்துவிடுவது இவர் வழக்கம். அப்போதுதான் தனது கதாபாத்திரத்தை தனக்குள் கொண்டு வர முடியும் என நம்புகிறார்.
"கதைப்படி என்றாலும், நடனமாடும் காட்சிகள் இருப்பின் அந்தப் படத்தை தொடக்க நிலையிலேயே தவிர்த்துவிடுவேன். காரணம் எனக்கு அறவே நடனமாட வராது.
"திரைத்துறையில் நீடிக்க முடியாது என்ற எண்ணத்துடன்தான் நடிக்க வந்தேன். ஆனால் எனக்கும் நடிக்க வரும் என்ற தன்னம்பிக்கையை என்னுள் விதைத்த படம் 'ஜெய்பீம்'. அதை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது, அதுபோன்ற படைப்புகள் நிறைய வர வேண்டும்," என்கிறார் லிஜோ மோல்.

