கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நேற்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமூக வலைத்
தளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரையில் குழந்தை
நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விஜய் இருக்கிறார்.
இவர் போடும் துள்ளலான நடனம் வயது குறைந்து இளமை கூடுவதுபோல் இருக்கும். தந்தையின் மூலம் திரைத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இவர் தான் ஒரு திறமையான நடிகர் என்பதை நிரூபித்துக் காட்டியவர்.
வசூலில் மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்த முதல் நாயகன் என்றால் அது தளபதி விஜய்தான். இவரின் நடிப்பில் வெளிவந்து தோல்வி அடைந்த படங்கள்கூட 50 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக் கிறது.
காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இன்று சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்கும் நாயகனாக வலம் வருகிறார்.
90 காலகட்டத்தில் காதல் படம் என்றால் அது விஜய்தான். ‘பூவே உனக்காக’ படத்தில் தொடங்கி, அடுத்தடுத்து ‘லவ் டுடே’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘நினைத்தேன்
வந்தாய்’ என ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட படங்கள் ஏராளம்.
பூவே உனக்காக: காதலை முதன்மையான உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு படமாகும். இன்று விஜய் உச்ச நடிகராக வளர காரணமாக அமைந்தது இந்தப் படம். ஆபாசமில்லாமல், வக்கிரமில்லாமல் காதலை மென்மையாகக் கொண்டு சென்ற படம்.
காதலுக்கு மரியாதை: மதம் கடந்த காதலைச் சொன்ன ஓர் படமாக வெளி வந்து ஒரு காவியமாக
மக்கள் மனதில் நின்றது. இந்த படத்தின் மூலம் கேரளாவில்
அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம்
உருவானது.
துள்ளாத மனமும் துள்ளும்: விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல் எனலாம். விஜய்யின் ‘குட்டி’ என்ற கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும்
பரவியது. படத்தில் விஜய் கேபிள் இணைக்கும் பையனாக வலம் வந்திருப்பார். இவரின் நடிப்பு சினிமா ரசிகர்கள் மனதில்
ஆழமாக
பதிந்தது.
குஷி:
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில்
வரவேற்பு பெற்றதோடு காதலர்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும் ‘குஷி’ அமைந்தது.
துப்பாக்கி: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம். விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு திரைப்
படமாகும். இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ்த் திரைப்படமாக அமைந்தது.
மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம். கொரோனாவால்,
50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தபோதிலும் திரையரங்குக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
தற்பொழுது வம்சி இயக்கத்தில் விஜய் 66வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர்.
விஜய் தன்னுடைய பிறந்த
நாளான நேற்று அதிகாலை 6.01 மணிக்கு தான் நடித்து வரும் 66வது படத்தின் சுவரொட்டியைவெளியிட்டு படத்தின் பெயர் ‘வாரிசு’ என்றும் இணையத் தளங்களில் பகிர்ந்துகொண்டார். அதை அவரின்
ரசிகர்கள் பரபரப்புடன் பகிர்ந்து வருகின்றனர்.
‘வாரிசு’ விஜய்யின் படங்களிலிருந்து சற்று மாறுபட்டு இருக்கும் என்றும் விஜய்யை வேறொரு கோணத்தில் ரசிகர்கள் காணலாம் என்றும் பல தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதைத்தொடர்ந்து இப்
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் சரத்
குமார் படத்தின் கதையைப் பற்றி மிகவும் பாராட்டி பேசியுள்ளார்.
இக்கதை முற்றிலும் புதுமையாகவும் அதேசமயம் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி இருக்குமென்றும் கூறினார். இதனால் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்றது.
சிலர்
இப்படத்தின் பெயர் மற்றும் முதல்
சுவரொட்டியைப் பாராட்டி வர பல ரசிகர்கள் பெயர் சிறப்பாக இல்லயே என குற்றம் சாட்டியும் வருகின்றனர்.
அண்மைகாலமாக விஜய் படங்களின் முதல் சுவரொட்டியில் அவருக்கு கசங்கிப்போன துணியும் கையில் ஆயுதமும் கொடுத்து ‘மாஸ்’ என்கிற பெயரில் ஒரு படத்தை வெளியிடுவார்கள். ஆனால் ‘வாரிசு’ சுவரொட்டியில் விஜய் பழைய விஜய் போன்று அம்சமாக இருக்கிறார்.
சண்டையே இல்லாமல் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில் பழைய விஜய்யை பார்க்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அதிரடி வசனம் பேசி, 20, 30 பேரை தூக்கிப் போட்டு மிதிக்கும் காட்சி எல்லாம் வாரிசில் இருக்காதாம்.
இது என் வழக்கமான படங்களை போன்று பாசமான படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் வம்சி பைடிபல்லி தெரிவித்தார்.
‘தளபதி’ என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடினார்
விஜய்யை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால் 1992ல் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் முன், விஜய் 1984ல் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கினார்.
1984 முதல் 1988 வரை, விஜய் ஆறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அனைத்தும் அவரது தந்தையால் இயக்கப்பட்டது. எனவே, கதாநாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன்பே நடிப்பில் உறுதியான அடித்தளத்தை வைத்திருந்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.