ஒரு படத்துக்காக உடல் எடையைக் கூட்டலாம் மொட்டை, அடித்துக் கொள்ளலாம். ஆனால் நடிகர் மாதவன் தன் அழகான பல் வரிசையை உடைத்துக் கொண்டுள்ளார்.
அவர் இயக்கியுள்ள 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகிறது. இது இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம்.
இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், பணத்துக்காக தாம் இந்தப் படத்தை இயக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல, ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் மாதவனுக்கு சொந்த வீடு இல்லை. இன்னமும்கூட வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார்.
"நான் தமிழில் கடைசியாக நடித்த 'விக்ரம் வேதா', அதற்கு முன்பு நடித்த 'இறுதிச்சுற்று' ஆகியவை வணிகப் படங்களாக அமைந்தன. எனக்குப் பணம் வேண்டும் என்றால், அதேபோன்ற வணிகப் படங்களை இயக்க முடியும். ஆனால் பணத்துக்காக 'ராக்கெட்ரி' படத்தை எடுக்கவில்லை.
"நம்பி நாராயணன் என்ற மனிதரின் சாதனைகளையும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தை தயாரித்துள்ளேன்.
"எனக்குச் சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது. துபாய், இந்தியா என எங்கிருந்தாலும் வாடகை வீட்டில் தான் தங்கியிருக்கிறேன். இந்தப் படத்துக்குப் பிறகு ஒரு வீடு வாங்கவேண்டும் என என் மனைவி கண்டிப்புடன் கூறியுள்ளார்.
"ஏனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாங்கள் வீடு மாற வேண்டியுள்ளது. எனவே, எனக்கு பணம் என்பது பெரிய விஷயம் கிடையாது. பணம் இன்றைக்கு வரும் நாளைக்கு போகும். இந்தக் கதையை மக்களுக்குச் சொல்லவேண்டும் என்பதே எனது நோக்கம்," என்று மாதவன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் பணியாற்றி விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் 1994ஆம் ஆண்டு திடீரென கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. எனினும், பல ஆண்டுகளாக நீடித்த வழக்கு விசாரணையின் முடிவில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ஒரே சமயத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது. ஏற்கெனவே கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ஜூலை 1ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது.
"நம்பி நாராயணன் வாழ்க்கையை மட்டுமே வைத்து மூன்று திரைப்படங்களை உருவாக்கலாம். ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதரால் எப்படி மிகப்பெரிய உயரங்களை எட்ட முடிந்தது என்பது முக்கியமான விஷயம்.
"இஸ்ரோவில் அவர் செய்த சாதனைகள், அவரது வாழ்க்கையைப் படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் ஆழமாக விதைத்துவிட்டது.
"அவருடைய அனைத்துவிதமான பழக்க வழக்கங்கள், நடை, உடை பாவனைகளைக் கவனித்தேன். அவர் தமிழர் என்பதுகூட முதலில் எனக்குத் தெரியாது. அவர் சாதனைகளைப் பார்க்கும்போது அவர் மீதான வழக்கு எனக்குச் சின்னதாக ஆகிவிட்டது.
"அவர் மீதான வழக்கு தொடர்பான காட்சிகள் ஏழு நிமிடங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற்றிருக்கும். நம்பி நாராயணன் யார் என்பதுதான் எனது தேடலாக இருந்தது. ஒரு பெரிய மனிதரைப் பற்றி அவர் அடைந்துள்ள உயரங்கள் பற்றி அறியாமலேயே இருந்துள்ளோம். இதுவே கூட பெரிய குற்றம்தான்.
"அச்சு அசலாக அவரைப்போல் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக என் வரிசைப் பற்களை உடைத்து மாற்றிக்கொண்டேன். 14 மணி நேரம் நகராமல் உட்கார்ந்து ஒவ்வொரு தலைமுடியையும் தனித்தனியாக எடுத்து 'கலரிங்' செய்திருக்கிறேன்.
"அதன் பிறகு சுற்றி இருப்பவர்கள் என்னை உண்மையான நம்பி நாராயணனாகவே பார்த்தார்கள். ஐந்து ஆண்டுகள் இந்தக் கதை யிலேயே வாழ்ந்திருக்கிறேன். கொஞ்சம் பிழைப்புக்காக 'மாறா', 'நிசப்தம்' என்று இடையில் ஒன்றிரண்டு படங்களில் நடித்தேன்.
"எனக்கும் நம்பி சாருக்கும் இருந்த அக்கறை, பக்குவம் வேற யாருக்கும் சீக்கிரம் வராது என்று தோன்றுகிறது," என்கிறார் மாதவன்.
, :

