இன்று நான்கு புதிய படங்கள் வெளியீடு காண்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
கொரோனா முடக்க நிலைக்குப் பிறகு கோடம்பாக்கத்தில் ஏராளமான படங்கள் வெளியீடு காணத் தயாராகி வருகின்றன. அதே சமயம் பணப் பிரச்சினை, நடிகர் நடிகைகளின் கால்ஷீட், பெரிய படங்களுடனான போட்டி உள்ளிட்ட காரணங்களால் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ள பல படங்கள் இன்னும்கூட முடங்கி உள்ளன.
நடப்பாண்டில், முதல் ஆறு மாதங்களில் எதிர்பார்த்ததைவிட குறைவான படங்களே வெளியீடு கண்டுள்ளன. நடப்பு ஜூன் மாதத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படம் பெரிய வெற்றியைக் கண்டுள்ளது.
ஜூன் 17ஆம் தேதி ஆர்ஜே பாலாஜி நடித்த 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட மேலும் சில படங்கள் வெளிவந்தன.
இந்நிலையில், இம்மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்', சுந்தர் சி, ஜெய் நடித்துள்ள 'பட்டாம்பூச்சி', சிபிராஜ் நடித்துள்ள 'மாயோன்', அசோக் செல்வன் நடித்துள்ள 'வேழம்' ஆகிய படங்கள் திரைகாண்கின்றன.
நான்கு படங்களுமே வெவ்வேறு கதைக்களங்களில் உருவாகி உள்ளன. இவற்றின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் 'மாயோன்' படத்துக்கு வித்தியாசமான முறையில் விளம்பர ஏற்பாடுகளைச் செய்துள்ளது அதன் தயாரிப்புத் தரப்பு.
இவை தவிர, குறைந்த செலவில் உருவாகி உள்ள மேலும் நான்கு படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
கலையரசன் நடித்துள்ள 'டைட்டானிக்', அரவிந்த்சாமி நடித்துள்ள 'கள்ளபார்ட்' ஆகிய படங்கள் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இரண்டு படங்களும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அடுத்த மாதம் அதிக எண்ணிக்கையிலான புதுப்படங்கள் திரைகாண உள்ளதாக கோடம்பாக்க விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

