கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ரெஜினா அறிமுகமாகி சுமார் 17 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது தனது திரைப்பயணத்தின் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பதாகச் சொல்கிறார் ரெஜினா.
இந்த நீண்ட பயணத்தில் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் சமமாகப் பார்க்கும் மனப்பக்குவம் வந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
கதாநாயகி, எதிர்மறை கதாபாத்திரம், ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம், சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் கதாபாத்திரம் என மாறுபட்ட தோற்றங்கள், கதைக்களங்கள் என்று அவ்வப்போது வியப்பை ஏற்படுத்துகிறார் ரெஜினா.
"பலவிதமான கதாபாத்திரங்களில் தோன்ற வேண்டும் என்பதுதான் பெரும்பாலான நடிகைகளின் விருப்பமாக இருக்கும். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. வித்தியாசமான, சவாலான வேடங்கள்தான் எனது எதிர்பார்ப்பாக உள்ளது.
"இதற்கு முன்பு 'முகிழ்' படத்தில் பத்து வயது குழந்தையின் தாயாக நடித்தேன். 'சக்ரா' படத்தில் வில்லி, சிரஞ்சீவி படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனம் என மாறுபட்ட பாத்திரங்களில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.
"உண்மையைச் சொல்ல வேண்டுமானால் வில்லத்தனம் நிறைந்த எதிர்மறை கதாபாத்திரங்களின் மீது அதிக ஈடுபாடு உள்ளது. அத்தகைய கதாபாத்திரமாக நான் இருந்திருந்தால், எவ்வாறு செயல்பட்டிருப்பேன் என்று யோசிப்பது சுவாரசியமான அனுபவம்," என்கிறார் ரெஜினா.
இவரது நடிப்பில் உருவாகி உள்ள 'ஃபிங்கர்டிப்' இணையத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் இரண்டாம் பாகமும் உருவாகி உள்ளது.
"அந்தத் தொடரில் நான் ஏற்றுள்ள பிரியா கதாபாத்திரம் சுவாரசியமானது. பிறர் கூறும் கருத்துகளைக் கேட்டு, அதை நினைத்து அஞ்சும் பெண்ணாக திரையில் தோன்றுகிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் அப்படிப்பட்ட பெண் அல்ல.
"நம் அனைவருக்குமே வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் நமக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை என்று எண்ணத் தோன்றும். அப்போது பிறர் கூறும் அனைத்தும் நம்மை ஏதாவது ஒருவகையில் பாதிக்கும். இதை மனதிற்கொண்டு பிரியாவாக நடித்தேன்," என்று சொல்லும் ரெஜினா, திரையுலக அனுபவங்கள் தம்மை பலவகையிலும் முதிர்ச்சியுள்ள பெண்ணாக மாற்றி உள்ளது என்கிறார்.
'ஃபிங்கர்டிப்' இணையத் தொடரானது, இணையக் குற்றங்கள் குறித்து விரிவாக அலசுகிறதாம். இன்றைய தேதியில் பிரபலங்கள் மட்டுமல்லாமல், சாமானியர்களும்கூட இணையத்தில் கேலி, கிண்டல்களுக்கு ஆளாவது வாடிக்கையாகிவிட்டது என்கிறார்.
"பள்ளி, கல்லூரி மாணவிகள்கூட மோசமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆண்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. ஆனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துகள், விமர்சனங்களால் இளம் பெண்கள் மனம் உடைந்துவிடக்கூடாது.
"சிறு வயது முதலே என்னைப் பற்றிய விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. யாராவது பெரிதாகப் பாராட்டினால் எவ்வாறு என் உணர்வுகளை வெளிப்படுத்துவேனோ, அது போன்றுதான் என்னைப் பற்றிய மோசமான கருத்துகளுக்கும் எதிர்வினையாற்றுவேன். பெரும்பாலான தருணங்களில், அடுத்து என்ன என்பதில்தான் என் கவனம் குவிந்திருக்கும்," என்கிறார் ரெஜினா.
திரையுலகில் அறிமுகமான புதிதில் முழு அர்ப்பணிப்புடன் தாம் செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாகக் குறிப்பிடுவர், 2011ஆம் ஆண்டுதான் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியதாகச் சொல்கிறார்.
"அப்போதுதான் என்ன மாதிரியான நடிகையாக நாம் உருவெடுக்க வேண்டும் என யோசித்து முடிவெடுத்தேன். அந்தச் சமயத்தில் எனக்குப் பெரிய இலக்குகள் ஏதும் இல்லை. அதேசமயம் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் மேலோங்கியது.
"அன்று எடுத்த முடிவை இன்று வரை செயல்படுத்தி வருகிறேன். சில ரசிகர்கள் நான் எத்தகைய வேடங்களில் நடிக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை தெரிவிப்பதுண்டு. எனது தோற்றம் எப்படிப்பட்டது, எனது எல்லைகள் என்ன என்பதை நன்கு அறிந்துள்ளேன்.
"அந்த அடிப்படையில்தான் எனக்கான படங்களையும் வேடங்களையும் தேர்வு செய்கிறேன். 17 ஆண்டுகள் நீடித்த இந்தப் பயணத்தில் எனக்கு ஊக்கமளித்து, வாய்ப்புகள் தந்த அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்," என்கிறார் ரெஜினா.
, :
ம்

