"திரைப்படங்களில் கவர்ச்சியாக உடையணிந்து நடிப்பதில் தவறில்லை. ஆனால் போட்டிருக்கும் ஆடையை தேவையின்றி விலக்குவதும் ஒதுக்குவதும்தான் தவறு," என்கிறார் நிகிலா விமல்.
சிபிராஜுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'ரங்கா' படத்தின் வசூல் தயாரிப்புத் தரப்புக்கு மனநிறைவு தரும் அளவு இருந்ததாகத் தகவல். அதையடுத்து தமிழிலும் தெலுங்கிலுமாக மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அண்மைய பேட்டியில் கவர்ச்சியாக நடிப்பதில் தொடங்கி, தனது குடும்பத்தார் வரை பல்வேறு விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
"நடிகை என்று ஆகிவிட்ட பிறகு நாம் ஏற்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடிக்கத் தயங்கக்கூடாது. நான் அவ்வாறு செய்யமாட்டேன்.
"என்னைப் பொறுத்தவைர முந்தானை இல்லாமல் கூட நடிக்கலாம். இல்லையெனில் வெறும் முண்டு கட்டிகூட நடிக்க நான் தயார்.
"ஆனால் போட்டி ருக்கும் முந்தானையை விலக்குவது, இழுப்பது எல்லாம் பெண்மைக்கு இழைக்கப்படும் அவமானம் என்பேன். இதை என்னால் அறவே ஏற்க இயலாது," என்று சொல்லும் நிகிலாவுக்கு, அவரைப் போலவே அழகான அக்கா இருக்கிறார்.
அவரிடம் இருந்துதான் துணிச்சலாக செயல்படுவது, வெளிப்படையாகப் பேசுவது என பல விஷயங்களைக் கற்றுக் கொண்டாராம். ஆனால் வீட்டில் இருக்கும்போது பெரும்பாலான நேரங்களில் இருவரும் எலியும் பூனையுமாகத்தான் இருப்பார்களாம்.
"எல்லாருடைய வீட்டிலும் நடப்பதுதான் எங்கள் வீட்டிலும் நடக்கிறது.
"சீப்பில் உள்ள தலைமுடி யாருடையது என்பதில் தொடங்கி, துணி துவைப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது யாருடைய பொறுப்பு என்பது வரையில் எல்லாவற்றிலும் சண்டை நடக்கும். ஆனால் எனக்காக அம்மாவிடம் சிபாரிசு செய்வது அக்காதான்.
"வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் நமக்குப் பிடிக்காததைச் செய்யக்கூடாது. அதைவிட நமக்குப் பிடித்தமானதைச் செய்ய வேண்டும் என்பதில் கவனம் இருக்க வேண்டும் என்று அக்காதான் எனக்கு அறிவுரை கூறி வழிநடத்தி வருகிறார்," என்று சொல்லும் நிகிலா, கொரோனா நெருக்கடியின்போது தன் தந்தையை இழந்தது வாழ்வின் மிகப்பெரிய சோகம் என்கிறார்.
சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்புவார் என்றுதான் நினைத்தாராம். ஆனால் விதி வேறு கணக்கை எழுதிவிட்டதாக நெகிழ்கிறார்.
திரையுலகம் இப்போது பல மாற்றங்களைக் கண்டுள்ளதாகக் குறிப்பிடுபவர், முன்புபோல் அல்லாமல் இப்போது திறமை உள்ளவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைத்து வருவதாகச் சொல்கிறார்.
"திரையுலகம் பெண்களுக்குப் பாதுகாப்பானதா என்று பலரும் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இளம்பெண்கள் எந்தவித அச்சமும் இன்றி நடிக்க வரலாம்.
"அனைத்து விஷயங்களும் உடனுக்குடன் ஊடகங்களில் வெளிவருவதால், தவறு செய்பவர்கள் அதிகம் யோசிக்கிறார்கள்.
"இதுவரை எனக்கு எந்தவித மோசமான அனுபவங்களும் ஏற்படவில்லை.
மாட்டிக்கொள்வோம் என்ற அச்சம் அவர்களிடம் அதிகரித்துவிட்டதாகவே தோன்றுகிறது," என்கிறார் நிகிலா விமல்.
நிகிலாவைப் பொறுத்தவரை ஒரே சமயத்தில் பல படங்களை ஒப்புக்கொள்வதில்லை. ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்.
"அடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்து விரைவில் விரிவான தகவல்களுடன் அறிவிப்பு வெளியாகும்," என்கிறார் நிகிலா.
நிகிலா விமல்
, :
ம்

