தனது இரண்டு மகன்களில் ஒருவரை நடிகராகவும் மற்றொருவரை இயக்குநராகவும் உருவாக்கி வருகிறார் நடிகர் செந்தில்.
திரையுலகில் வாரிசுகளை அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சரியான படங்களைத் தேர்வு செய்து அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்.
அந்த வகையில் தாம் நடிக்கும் திரைப்படத்திலேயே தன் மகனை அறிமுகப்படுத்துகிறார் செந்தில்.
தற்போது பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் 'தடை உடை' படத்தில் நடித்து வருகிறார் செந்தில்.
இந்தப் படத்தில் அவரது மகன் மணிகண்ட பிரபு நடிகராக அறிமுகமாகிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திலும் இருவரும் தந்தை, மகனாக நடிக்கின்றனர்.
'தடை உடை' படத்தை ரேஷ்மி சிம்ஹா தயாரித்து, என்.எஸ்.ராகேஷ் இயக்கியுள்ளார். பாபி சிம்ஹா, மிஷா நரங், ரோகிணி, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், மிக விரைவில் படம் வெளியீடு காண உள்ளது.
செந்திலுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்தவரான மணிகண்ட பிரபு பல் மருத்துவர் ஆவார்.
இவர்தான் தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இரண்டாவது மகன் ஹேமசந்திர பாபு திரைப்பட இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
"நாற்பது ஆண்டு காலமாக உலகத் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்த என் தந்தையின் பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்படுவேன்," என்கிறார் மணிகண்ட பிரபு.

