'ராக்கெட்ரி: நம்பி விளைவு' திரைப்படம் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை உலகிற்கு எடுத்துக் காட்டும் என்கிறார் அப்படத்தின் நாயகனும் இயக்குநருமான மாதவன்.
மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சு சார்பில் இப்படத்தின் சிறப்புக் காட்சி டெல்லியில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய மாதவன், இப்படத்தை விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு சமர்ப்பிப்பதாகக் குறிப்பிட்டார்.
"இந்தப் படத்துக்காக பல ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறேன். விண்வெளி, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் ஆளுமையைப் போற்றும் படமாக இது இருக்கும்.
"விகாஸ் இஞ்சினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சாதனையாளர் நம்பி நாராயணன். அறிவியல் வளர்ச்சி, மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் திறமை குறித்து உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவும் இந்தப் படம் அமையும்," என்றார் மாதவன்.
இத்திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே மாதவனின் அண்மைய டுவிட்டர் பதிவை வைத்து சிலர் சர்ச்சை கிளப்பியுள்ளனர்.
அதில், ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும் தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்புள்ளது என மாதவன் குறிப்பிட்டுள்ளார்.
"நமது பஞ்சாங்கத்தில் கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு விசை ஆகியவை குறித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர்.
"அந்த பஞ்சாங்கத்தில் இருக்கும் தரவுகள் தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நமது செயற்கைக்கோள் வெற்றிகரமாக செல்ல உதவியாக இருந்தது," என்று மாதவன் தெரிவித்துள்ளார்.
இப்பதிவை பலரும் விமர்சித்துள்ளனர். பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகத்துக்குச் செல்வது முடியாத காரியம் என்று சொல்லி அவரைப் பலரும் கேலி செய்தும் விமர்சித்தும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இதையடுத்து தமது சமூக ஊடகப்பதிவு குறித்து மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.
"பழைய பஞ்சாங்கம் என்று கேலி செய்வதற்கு நான் தகுதியானவன்தான். இதுவரை அறியாமையில் இருந்துள்ளேன். ஆனால், நாம் இரண்டு இன்ஜின்களுடன் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பிய சாதனையை யாரும் மறுக்க முடியாது. நம்பி நாராயணனின் 'விகாஸ் இன்ஜின்' ஒரு ராக் ஸ்டார்," என்று தெரிவித்துள்ளார் மாதவன்.
'ராக்கெட்ரி: நம்பி விளைவு' பட வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

