மருத்துவம், பொறியியல் படித்தவர்கள் திரையுலகுக்கு வருவது அதிகரித்துள்ளது. அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் ஸ்ரீலீலா. தெலுங்கு, கன்னட ரசிகர்களை தனது அழகாலும் நடன அசைவுகளாலும் கட்டிப்போட்டுள்ளார் இந்த இளம் நாயகி.
ஸ்ரீலீலாவின் சொந்த ஊர் பெங்களூரு. பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்குதான். எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பை மேற்கொண்டுள்ள ஸ்ரீலீலா விரைவில் மருத்துவராகப் போகிறார்.
"எங்கள் குடும்பத்தில் பெரும்பாலும் எல்லோருமே அதிகம் படித்தவர்கள். அம்மாவும் மருத்துவர்தான். சிறு வயது முதல் அவரைப்போல் மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது.
"வீட்டில் உள்ளவர்களும் உறவினர்களும் தந்த ஊக்கத்தால் மருத்துவராகப் போகிறேன். படிப்புக்கு மத்தியில் நடிப்பு என்பது சிரமமான விஷயம்தான். ஆனால் எனக்கு இரண்டும் வேண்டும். தயக்கத்துடன் என் விருப்பத்தை தெரிவித்தபோது, எந்த எதிர்ப்பும் இல்லை.
"பிறகென்ன, தெலுங்கிலும் கன்னடத்திலும் வாய்ப்புகள் தேடிவந்தபோது தயங்காமல் ஏற்றுக்கொண்டேன்," என்கிறார் ஸ்ரீலீலா.
'கேஜிஎஃப்' ஒளிப்பதிவாளர் புவன் கௌடா நட்புக்காக இவரைப் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்திருந்தாராம்.
அவற்றை சமூக ஊடகங்களில் ஸ்ரீலீலா வெளியிடப்போக, அவற்றைப் பார்த்த இயக்குநர் ஏ.பி.அர்ஜுன் தன்னுடைய 'கிஸ்' படத்தின் நாயகியாகத் தேர்வு செய்துள்ளார்.
அறிமுகப் படத்திலேயே சிறப்பாக நடித்திருப்பதாகப் பாராட்டு கிடைத்துள்ளது. ஸ்ரீலீலாவுக்கு தெலுங்கு திரையுலகில் நிறைய நண்பர்கள் உள்ளனர்.
தாய்மொழியும் தெலுங்குதான் என்பதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் தன்னால் தேடி வந்துள்ளன.
எனினும் பெங்களூரு பெண் என்பதால் கன்னடப் படங்களிலும் நடிக்க ஆர்வம் கொண்டிருந்தவரை காலம் காத்திருக்க வைக்கவில்லை.
'கிஸ்' படத்துக்காக சிறந்த புதுமுக நாயகிக்கான சைமா விருது கிடைத்த கையோடு கன்னடத்திலும் அறிமுகமாகிவிட்டார்.
"இரு மொழிகளில் நடித்த பிறகு எந்த இளம் நாயகியாக இருந்தாலும் தமிழில் நடிக்கவேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. மிக விரைவில் முன்னணி கதாநாயகன் ஒருவரோடு நான் தமிழிலும் டூயட் பாடப் போகிறேன். அதுகுறித்த விவரங்கள் மிக விரைவில் வெளியாகும்.
"என்னைப் பொறுத்தவரை மொழி என்பது திரையுலகில் ஒரு தடையல்ல. நான் பெரும் கனவுகளுடன் திரைத்துறைக்கு வந்துள்ளேன். எதிலும் நூறு விழுக்காடு உண்மையாக ஈடுபட வேண்டும், நேர்மையாக உழைக்கவேண்டும் என்பதுதான் எனது கொள்கை.
"நல்ல நடிகை எனப் பெயர் எடுப்பதுதான் எனது இலக்கு, தற்போதைய கனவு. பெரிய கனவுதான் என்றாலும் அது கைகூடுவதற்காக கடுமையாக உழைப்பேன்," என்கிறார் ஸ்ரீலீலா.
ஓய்வு கிடைத்தால் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதுதான் இவரது முக்கியமான பொழுதுபோக்காம்.
குறிப்பாக விஜய், விஜய் சேதுபதி படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுகிறார். அவர்கள்தான் ஸ்ரீலீலாவுக்குப் பிடித்தமான நாயகர்கள்.
நாள் முழுவதும் 'அரபிக்குத்து' பாடலை முணுமுணுத்தபடி இருப்பதாகச் சொல்கிறார்.
"சினிமாவுக்கு அடுத்தபடியாக நடனத்தில்தான் ஆர்வம் அதிகம். தினமும் நடனப் பயிற்சி மேற்கொள்வதால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறது. தவிர நேரம் கிடைத்தால் நடைப்பயிற்சியும் மேற்கொள்வேன்.
"தமிழ் ரசிகர்கள் எந்த அளவுக்கு திரையுலகத்தினரைக் கொண்டாடுவார்கள் என்பது எனக்கும் தெரியும். பிடித்தமான கலைஞர்களிடம் ஒரு குழந்தையைப் போல் பாசம் காட்டுவார்கள் என்பதை பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் அன்பும் ஆதரவும் எனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்," என்கிறார் ஸ்ரீலீலா.
, :
ஸ்ரீலீலா

