நடிகை மீனாவின் கணவர் காலமானார்

நடிகை மீனாவின் கணவர் காலமானார்

1 mins read
76ec62a9-0ba8-49b2-a04e-f3a684024416
கணவர் வித்யாசாகர், மகள் நைனிகாவுடன் நடிகை மீனா (படம்: இந்திய ஊடகம்) -

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று காலை காலமானார். அவர் ஏற்கெனெவே நுரையீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொவிட்-19 கிருமித் தொற்றியதால், நுரையீரல் பாதிப்பு மோசமடைந்ததாகக் கூறப்பட்டது.

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில நாள்களாக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் இன்று உயிரிழந்தார்.

வித்யாசாகரின் இறப்பு குறித்து திரையுலகத்தைச் சேர்ந்த பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். நாட்டாமை படத்தில் மீனாவுடன் ஜோடியாக இணைந்த நடிகர் சரத்குமார் மீனாவின் குடும்பத்துக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை டுவிட்டர் பக்கம் மூலமாக தெரிவித்துக்கொண்டார்.

தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

2009ம் ஆண்டு ஜூன் மாதம் மீனா வித்யாசாகரை மணந்தார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் நடிகர் விஜயின் 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.