திரைப்படங்களை திரையரங்கில் பார்க்கும்போது கிடைக்கும் சுகமே அலாதியானதுதான் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் தம் மீது ஆதிக்கம் செலுத்த, தாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்றும் சொல்கிறார்.
கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் முன்னைவிட அதிக கவனம் செலுத்துவதாகச் சொல்பவர், எப்போதுமே தமது முடிவு சரியாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்.
"நான் எப்போதுமே மனதிற்பட்டதைத்தான் பேசுவேன். பொய் செல்ல வேண்டிய, எதையேனும் சமாளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
"இதற்கு முன்பு 'அதே கண்கள்' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டபோது மறுத்துவிட்டேன். அது தவறு என்பது இப்போது புரிகிறது. பொதுவாக நடிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என விரும்புவார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல," என்று சொல்லும் ஐஸ்வர்யாவுக்கு, கைவசம் போதுமான பட வாய்ப்பு கள் உள்ளன. எனவே புதுப் படங்களை ஏற்பதில் அவசரம் காட்டவில்லை என்கிறார்.
"ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போதும் ஏதாவது புது விஷயத்தைக் கற்றுக்கொள்கிறேன். சிலர் என்னைப் பாராட்டும்போது, 'ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிட்டீர்கள்' என்று புகழ்வார்கள். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. எந்தவொரு கதாபாத்திரத்தையும் நான் தலைக்குள் ஏற்றிக்கொள்வதில்லை. அனைத்தையும் சுமக்க நினைப்பதும் சரியல்ல.
"நான் நடிக்கும் பாத்திரங்கள் என்னையும் என் சிந்தனைகளையும் விழுங்கிவிடுவதாக இருக் கக் கூடாது. அதை நான் அனுமதிக்க மாட்டேன்," என்கிறார் ஐஸ்வர்யா.
ஒரே சமயத்தில் பல படங்களில் நடிக்கும்போது ஒருகுறிப்பிட்ட பாத்திரத்தின் தன்மையை மற்றொரு பாத்திரத்தின் மீது திணித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகச் சொல்பவர், இந்த முடிவுதான் தமக்கான வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுத் தருகிறது என்கிறார்.
அண்மையில் ஐஸ்வர்யா நடித்த 'சூழல்' இணையத்தொடர் வெளியீடு கண்டு, ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது.
"கொரோனா காலக்கட்டத்தில் படப்பிடிப்புகள் நடைபெறாததால் பல படங்கள் முடங்கிப்போயின. ஒருவகையில் எனக்கு அது பயிற்சிக்காலமாக மாறிவிட்டது.
"நான் அடுத்தடுத்து நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் எனக்கான கதாபாத்திரங்களின் தன்மை குறித்து ஆராய்ந்தேன். சில வசனங்களையும் பேசி, ஒத்திகை பார்க்க முடிந்தது," என்று சொல்லும் ஐஸ்வர்யா, சிறு வயதிலேயே திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது என்றால் உற்சாகமாகிவிடுவாராம். அந்த அனுபவங்கள் இன்றளவும் மனதில் நிழலாடுவதாகக் குறிப்பிடுகிறார். திரையரங்குகளா, ஓடிடி தளங்களா என்று கேள்வி எழுப்பினால் தம்மால் பதில் சொல்ல முடியாது என்கிறார்.
"ரஜினி சார் படங்கள், 'ஆர்ஆர்ஆர்', 'பாகுபலி' போன்ற படங்களை திரையரங்கில் எழும் விசில், கைத்தட்டல்களுக்கு மத்தியில் பார்க்கும் அனுபவத்தை கற்பனை செய்து பாருங்கள். அந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் வீட்டில் அமர்ந்தபடி பார்த்தால் நிச்சயம் கிடைக்காது.
"ஒரு திரைப்பட விழாவில் நான் நடித்த 'க/பெ.ரணசிங்கம்' திரையிடப்பட்டது. அதைப் பார்த்த சிலர் கண்ணீர்விட்டு கதறி அழுததை நான் நேரடியாகப் பார்த்தேன். திரையரங்குகளின் தாக்கம் என்பது இதுதான். ரசிகர்களை எங்கும் போகவிடாமல், அசையவிடாமல் படம் பார்க்க வைக்கும்," என்று சொல்லும் ஐஸ்வர்யா, இத்தகைய அனுபவங்கள் கிடைக்க வேண்டும் எனில் திரையரங்குகளுக்கு செல்வதுதான் ஒரே வழி என்கிறார்.
"சில சமயங்களில் வயதான கதாபாத்திரங்களில் தோன்றுவது ஏன் என்று சிலர் கேட்கிறார்கள். அப்படிப்பட்ட வேடங்கள் ஒரு நடிகையாக என்னை மேலும் மெருகேற்றுகின்றன," என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
, :

