கொரோனா வேளையில் வேதிகா குறித்து ஒரு தகவலும் இல்லை. ஒருவேளை தமிழில் இனி நடிப்பதே இல்லை என முடிவு செய்துவிட்டாரா என்று ரசிகர்கள் சந்தேகப்பட்ட நிலையில், பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கும் 'கஜானா' படத்தின் மூலம் தனது இருப்பை உறுதிசெய்துள்ளார் வேதிகா.
முதல்முறையாக இதில் அகழ்வாராய்ச்சியாளர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அது மட்டுமல்ல, இவருக்கு சில சண்டைக் காட்சிகளும் உள்ளனவாம்.
"வேதிகாதான் படத்தின் நாயகி. நான் கதையை விவரித்த போதே மிகுந்த ஆர்வமாகி, எப்போது படப்பிடிப்பு என்று கேட்டார். அந்த ஆர்வத்துக்கு இணையாக படப்பிடிப்பின்போது மிகுந்த ஒத்துழைப்பும் கொடுத்தார்.
"வேதிகாவை இத்தனை நாள்களாக அவரது நடனத்துக்காக மட்டுமே பாராட்டி வந்தோம். அவரது நடிப்பு எப்போதுமே சிறப்பாக இருக்கும் என்பது தெரியும். உணர்வுபூர்வமான காட்சிகளில் அசத்துவார்.
"இந்தப் படத்தில் அதிரடி நாயகியாகவும் அவர் அவதாரம் எடுத்துள்ளார். டூப் போடாமல் சில சாகசக் காட்சிகளில் வேதிகா நடித்த விதத்தைப் பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் அசந்துபோனது. இந்தக் காட்சிகள் அவருக்கு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், படத்துக்கு கூடுதல் பலம்சேர்க்கும் விதமாக இந்தக் காட்சிகள் அமைந்துள்ளன," என்கிறார் இயக்குநர் பிரபாதிஸ் சாம்ஸ்.
'கஜானா' படத்தில் சாந்தினியும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ஒருவித வில்லத்தனத்துடன் கூடிய கதாபாத்திரம் என்பதை மட்டுமே இப்போது சொல்லமுடியும் என்றும் மற்ற அனைத்தும் ரகசியம் என்றும் இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.
"சாந்தினி ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கிறார். அதன்பிறகு அவரால் மேலும் சில உயரங்களைத் தொட முடியும். அதேபோல், இனிகோ பிரபாகருக்கு இந்தப் படம் புதிய அடையாளத்தை ஏற்படுத்தித் தரும். இவர்களைத் தவிர யோகி பாபு, பிரதாப் போத்தன், மொட்டை ராஜேந்திரன், சென்ட்ராயன் ஆகியோருடன் ஹரிஷ் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
"இந்தப் படத்துக்கு முதலில் 'வீரப்பனின் கஜானா' என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சந்தனக் கடத்தல் வீரப்பன் குடும்பத்தார் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, வெறும் 'கஜானா'வாக சுருக்கிவிட்டனர்.
தமிழில் சாகசங்கள் நிறைந்த திரைப்படம் வெளியாகி நீண்ட காலமாகிவிட்டது. அந்தக் குறையைப் போக்கும் வகையில், காட்டில் உள்ள அனைத்து மிருகங்களையும் வைத்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். பொதுவாக, இந்திய காடுகளில் உள்ள அனைத்து விலங்குகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
"புலி, யானை, கரடி, குரங்கு என்று அனைத்து விலங்குகளும் உள்ள திரைப்படங்களை நானும் ஒரு ரசிகனாக இருந்து பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால், ஒரு யானையைப் பேயாக இதுவரை யாரும் காட்டியதில்லை. நாங்கள் அதைச் செய்திருக்கிறோம்.
"ஒரு வகையில் இந்தக் கதையின் நாயகன் என்று யானையைச் சொல்லலாம். இந்திய தேசத்துக்கு என்று பெருமைமிகு வரலாறும் பாரம்பரியமும் உள்ளன. அதை மையமாக வைத்து எழுதிய கதை இது," என்கிறார் பிரபாதிஸ் சாம்ஸ்.
விலங்குகள் சம்பந்தப்பட்ட படம் என்றாலே பலருக்கு ஹாலிவுட் படைப்புகள்தான் நினைவுக்கு வரும் என்று குறிப்பிடுபவர், அந்த படங்களுக்கு இணையாக தனது படம் உருவாகி வருவதாகச் சொல்கிறார்.
எனவே, தமிழ் சினிமாவில் இது முக்கிய படைப்பாக காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
"இந்தப் படத்தில் இன்னொரு விலங்கையும் காண்பிக்கப் போகிறோம். அது என்ன மாதிரியான விலங்கு, அது எப்படி இருக்கும் என்பதை எல்லாம் இப்போதே சொல்ல முடியாது. டைனோசர் மாதிரி என்றுகூட வைத்துக்கொள்ளலாம்.
"அந்த மிருகத்தை 5,000 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய மண்ணில் வாழ்ந்த உயிரினமாகக் காண்பித்துள்ளோம். படம் பார்க்கும்போது அந்த விலங்குடன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை மிரளவைக்கும்," என்கிறார் பிரபாதிஸ் சாம்ஸ்.
"இந்தப் படத்தில் இரண்டு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி உள்ளனர். ஒரே சமயத்தில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. விக்ரம் இசை அமைத்துள்ளார். கபிலன் பாடல்களை எழுதியுள்ளார். பின்னணி இசைக்கு சாம்.சி.எஸ். பொறுப்பேற்றுள்ளார்.
"வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. மற்ற இடங்களில் 40 நாள்களில் ஒரு படத்தை எடுக்க முடியும் என்றால், வனப்பகுதியில் எடுக்கும்போது 80 நாள்கள் ஆகும். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
"எங்கள் படக்குழு உழைப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. எனவே, இனி ரசிகர்களிடம்தான் எல்லாம் இருக்கிறது," என்கிறார் இயக்குநர் பிரபாதிஸ் சாம்ஸ்.
, :

