நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்நிலையில், படத்தின் கதை விவாதத்தின்போது நிகழ்ந்த சில சுவாரசியங்கள் குறித்து தெரியவந்துள்ளது.
படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதியாகிவிட்டதாகத் தெரிகிறது. அடுத்த மாதம் 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும்போது அவர் அதில் பங்கேற்க மாட்டார் என்றும் மாத இறுதியில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கும்போது படக்குழுவுடன் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
'ஜெயிலர்' படத்துக்கு இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதை அமைப்பதாக வெளியான தகவல் உண்மையல்லவாம். ரஜினியிடம் முழுக்கதையையும் விவரித்த பின்னர், ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா போன்ற அனுபவ இயக்குநர்களிடம் விவாதித்து மாற்றங்களைச் செய்யலாமா என்று நெல்சன் கேட்டபோது, தேவையில்லை என்று ரஜினி கூறிவிட்டதாகத் தகவல்.
"உங்கள் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. தயக்கம் இல்லாமல் காட்சிகளை உருவாக்குங்கள். நகைச்சுவை மட்டும் சற்று தூக்கலாக இருக்கட்டும்," என்று ரஜினி கூறியதைக் கேட்டதும் நெல்சன் உற்சாகமாகிவிட்டாராம்.
தில்லுமுல்லு உட்பட தாம் நகைச்சுவையாக நடித்துள்ள சில படங்களைப் பார்க்குமாறும் நெல்சனிடம் ரஜினி கூறியுள்ளார்.
"உங்களுடைய நகைச்சுவை அணியில் உள்ள அனைத்து நடிகர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்கவேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்யுங்கள்," என்று கூறியபோதிலும், இரண்டு கதாபாத்திரங்களுக்கு மட்டும் இரு நடிகர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்தாராம்.
அவ்வப்போது நெல்சன் தனது குழுவினருடன் கதை விவாதத்தில் ஈடுபட்ட இடத்துக்கு வருகை தந்த ரஜினி, ஓரிரு மணி நேரத்தை அக்குழுவுடன் செலவிட்டுள்ளார். அப்போது தமது முந்தைய படங்களின் படப்பிடிப்புகளின்போது நிகழ்ந்த சுவாரசியமான விஷயங்களைப் பகிரந்து கொண்டுள்ளார்.
'ஜெயிலர்' படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஹைதராபாத்தில் அரங்கு அமைத்து நடத்த உள்ளனர்.

