'ரசிகர்கள் இல்லையென்றால் நான் இல்லை' என்கிறார் விக்ரம். இரு தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு பழைய தெம்புடன் வலம் வருகிறார்.
இந்நிலையில், இவர் நடித்துள்ள 'கோப்ரா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. இதில் கலந்துகொண்டு பேசிய விக்ரம், சினிமாதான் தமது உயிர் என்றும் தமக்கு திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.
"இருபது வயதில் பெரிய விபத்தில் சிக்கினேன். அப்போது அறுவை சிகிச்சை மூலம் ஒரு காலை அகற்ற வேண்டும் என்று கூறிவிட்டனர். ஆனால் நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மன உறுதியுடன் போராடியதன் காரணமாக இன்று உங்கள் முன்பு இரு கால்களில் நிற்கிறேன்.
"எனக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் நெருக்கமானவர்கள் பலர் பதறிப்போயினர். அத்தகையவர்களின் அன்பாலும் அக்கறையாலும் தற்போது நான் நலமாக உள்ளேன். அதை தெரிவிக்கத்தான் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன்," என்றார் விக்ரம்.
'கோப்ரா' படத்தில் ஏழு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் குறிப்பிட்ட இவர், ஒவ்வொரு பாத்திரத்துக்கும் வித்தியாசமான பின்னணிக்குரல் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானின் இசையில் நடித்ததையும் இவர் நினைவுகூர்ந்தார்.
"பல ஆண்டுகளுக்கு முன் 'சோழா டீ' என்ற தேநீர் விளம்பரத்தில் நடித்தேன். அதில் எனக்கு சோழ மன்னன் கதாபாத்திரம். அதற்கு திலீப் என்ற இளையர் இசை அமைத்தார். அந்த இசை அனைவரையும் கவர்ந்தது. அவர்தான் இன்று நம் கண்முன் ரகுமானாக பல சாதனைகளைப் புரிந்து வளர்ந்து நிற்கிறார்.
"இன்று 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்தது கனவுபோல் உள்ளது. ஒரு வரலாற்றுக் கதையில் நடிப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
"நானும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறேன். சில தருணங்களில் ஆஸ்கார் விருது பெற வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இதற்குக் காரணம் ஏ.ஆர்.ரகுமான்.
"நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் ஏற்படுத்துகிறார். நமக்குள் ஒரு கனவு இருந்தால்... ஒரு லட்சியம் இருந்தால்... அதற்காக கடினமாக உழைத்தால்... யாராக இருந்தாலும் மிகப் பெரிய உயரத்தை எட்ட முடியும். நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கான எல்லையைத் தொட முடியும். அதற்கு ரகுமான் சிறந்த உதாரணம்.
"இந்த விழாவின் நாயகனான அவர் இந்திய நாட்டின் பெருமை. வாழும் சகாப்தம். அவருடைய இசைக்கு அனைவரையும்போல் நானும் ஒரு ரசிகன். அவர் 'கோப்ரா' படத்தில் தன்னுடைய பங்களிப்பை வழங்கியதற்காக நன்றி," என்றார் விக்ரம்.
படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக உருவெடுப்பார் என்று பாராட்டிய விக்ரம், 'கோப்ரா' படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
"காரணம், அந்த நிறுவனம் ஒரு படத்தை வெளியிடுகிறது என்றால் வெற்றி உறுதி. அதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
"இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்துள்ளார். அவர் கிரிக்கெட் விளையாட்டில் பந்தடிப்பு, பந்து வீச்சு என்று இரண்டிலும் பெயரெடுத்தவர். கிரிக்கெட் ஆட்டத்தைப்போல் இந்தப் படத்துக்காகவும் நிறைய சிக்சர்களை அடித்துள்ளார். மற்ற நட்சத்திரங்களும் பங்களித்துள்ளனர்.
"இந்தப் படத்துக்காக முதன்முதலாக சிக்கலான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். எழு விதமான தோற்றங்களில் மட்டுமல்லாமல், வசனம் பேசுவதிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்றார் இயக்குநர். அதற்காக மிகவும் மெனக்கெட்டேன்.
"படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நுட்பமாகச் செதுக்கி உள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அவரது உழைப்புக்காகவே இந்தப் படம் வெற்றிபெற வேண்டும்," என்றார் விக்ரம்.

