கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவில் தங்கி உள்ளார் மரியா ரயபோஷப்கா.
உக்ரேனைச் சேர்ந்த இவர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் கதாநாயகி.
படப்பிடிப்புக்காக தமிழகம் வந்தவர், நான்கு மாதங்கள் வேகமாக கடந்து சென்றுவிட்டதாகச் சொல்கிறார்.
"மிக அருமையான படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்டோபர் மாதம் இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், நான் நடித்துள்ள படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்கிறார் மரியா.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது 'பிரின்ஸ்' படம். காதலும் நகைச்சுவையும் கலந்த கதைக்களம் சிவகார்த்திகேயனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் அனுதீப்.
தமன் இசையமைக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்தி கேயன் ஆசிரியராக நடிப்பதாகத் தகவல்.

