இரண்டு ஆண்டுகளுக்குள் தமது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது என்கிறார் கிரித்தி ஷெட்டி.
சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'உப்பெனா' நாயகியாக அறிமுகமான பின்பு, நல்ல வாய்ப்புகள் தேடி வருவதாகச் சொல்கிறார்.
"வாழ்க்கை அதன் போக்கில் இனிய முறையில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட வகையிலும் முதிர்ச்சியுள்ள பெண்ணாக பக்குவம் அடைந்துள்ளேன்.
"என்னைச் சுற்றியும் என்னிடமும் பல மாற்றங்களைக் காண முடிகிறது. ரசிகர்களிடம் இருந்து அன்பும் ஆதரவும் மிகுதியாக கிடைக்கும் என நான் எதிர்பார்த்ததில்லை," என்கிறார் கிரித்தி.
தனது முதல் படமான 'உப்பெனா'வை ஆந்திராவில் உள்ள திரையரங்கு ஒன்றில் பார்த்து ரசித்துள்ளார்.
அப்போது ரசிகர்கள் ஒவ்வொரு காட்சிக்கும் கைதட்டியதில், விசில் அடித்ததில் அந்தக் கட்டடமே அதிர்ந்து போனதாகக் கூறுகிறார்.
"படம் வெளியாகி இரு வாரங்களுக்குப் பிறகே திரையரங்கம் சென்றேன். பல ரசிகர்கள் ஒவ்வொரு காட்சிக்கும் வசனங்களை மனப்பாடம் செய்திருந்தனர். அதைக் கண்டு வியப்பாக இருந்தது. அந்த ரசிகர்கள் இந்தப் படத்தைப் பலமுறை பார்த்திருப்பார்கள் எனப் புரிந்தது," என்கிறார் கிரித்தி ஷெட்டி.
அடுத்தடுத்து, கிராமத்துப் பின்னணியில் உருவாகும் படங்களில்தான் இவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களாக தேர்வு செய்து வருகிறார்.
"ஒரே மாதிரியான பட வாய்ப்புகள் தேடி வருவது இயல்புதான். ஆனால் அந்த வலையில் சிக்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால்தான் 'உப்பென்னா' படத்துக்குப் பிறகு 'ஷ்யாம் சிங்கா ராய்' படத்தில் நடித்தேன்.
"ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் ரசிகர்கள் நம்மை மறந்துவிடுவார்கள். அனுபவம் உள்ள நடிகை இப்படி நடித்தால் பரவாயில்லை. ஏனெனில், அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கும். புது முகமான நான் அப்படிச் செய்ய முடியாது," என்று சொல்லும் கிரித்தி ஷெட்டி, நடனத்திலும் அசத்துகிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'வாரியர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'புல்லட்' பாடலில் இவரது நடனத்தைக் கண்டு இளையர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.
தற்போது சிறப்பாக நடனமாடக் கூடிய தென்னிந்திய நடிகைகளில் இவருக்குத்தான் முதல் இடம் என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலர் பதிவிட்டுள்ளனர்.
"எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பதுதான் எனது கொள்கை. நடிப்பு, நடனம், உடற்பயிற்சி, நட்பும் உறவும் பாராட்டுவது என அனைத்திலும் இந்த கொள்கையைக் கடைப்பிடிக்கிறேன். நடனமாடுவது ரொம்பப் பிடிக்கும். அதற்காக மேற்கொண்ட பயிற்சி பலன் அளித்திருக்கிறது.
"பொதுவாக நான் யாரையும் போட்டியாகக் கருதுவதில்லை. அதேபோல் முதல் இடம் என்பதிலும் எனக்கு நாட்டம் இல்லை. ரசிகர்கள் திறமையுள்ள அனைவரையும் ஆதரித்து அரவணைக்கத் தயாராக உள்ளனர்.
"பிறகு ஏன் முதல் இடம், இரண்டாம் இடம் என்று பிரித்துப் பார்க்க வேண்டும்? புதுமுகம் நடித்த ஒரு படம் இரண்டு வாரங்களுக்கு திரையரங்கில் ஓடுவது பெரிய விஷயம். நான் அறிமுகமான படம் என்னால் ஓடவில்லை.
"எனினும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு திரையரங்கம் வந்த ரசிகர்கள் என் நடிப்புக்கு கைதட்டியதைக் கண்டேன். ரசிகர்கள் கலைஞர்களிடம் பாகுபாடு காட்டுவதில்லை என்ற உண்மை எனக்கு அப்போது புரிந்தது," என்கிறார் கிரித்தி ஷெட்டி.
இவர் தற்போது தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார்.
கிரித்தி ஷெட்டி
, :

