நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரண்டு மலையாளப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அவற்றுள் ஒரு படம் பிரதாப் போத்தன் இயக்கத்தில் உருவான 'ஒரு யாத்ரமொழி'.
நடிகர் மோகன் லால் இதில் நாயகனாக நடித்திருந்தார். தாம் நடித்த சிறந்த படங்களில் இந்த மலையாளப் படமும் ஒன்று என்று சிவாஜி அடிக்கடி கூறுவதுண்டு.
திரையுலகில் தாம் சாதித்த விஷயங்களில், சிவாஜியை வைத்து படம் இயக்கியதும் ஒன்று என்று பிரதாப் போத்தனும் அவ்வப்போது சொல்லி புளகாங்கிதப்படுவார்.
இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான அவர், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.
கடந்த 1980களில் வெளியான பல படங்களில் நாயகனாகவும் அதன் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர் பிரதாப் போத்தன்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள் ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர், சென்னையில் உள்ள வீட்டில் காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
இவரது முன்னாள் மனைவி நடிகை ராதிகா ஆவார்.
'அழியாத கோலங்கள்', 'மூடுபனி', 'இளமைக் கோலம்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' உட்பட பல வெற்றிப் படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரதாப் போத்தன், தமிழில் 'மீண்டும் ஒரு காதல் கதை', 'வெற்றிவிழா', 'மை டியர் மார்த்தாண்டன்', 'மகுடம்', 'ஆத்மா', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

