உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவதாகவும் மீண்டும் இந்திப் படங்களில் நடிக்க கதைகளைக் கேட்டு வருவதாகவும் ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரபாசுடன் 'சலார்' படத்தில் நடித்து வரும் இவர், நல்ல படைப்புகளில் நடிப்பது மனநிறைவைத் தருவதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"எனது தந்தை கமல்ஹாசனிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசை என்றால் எனக்கு உயிர்.
"அவர்கள் இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி மனிதாபிமானம் நிறைந்த மிகச்சிறந்த மனிதர்கள்," என்று ஷ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
இசைத்துறை மீதான ஆர்வம் தமக்கு சிறிதும் குறையவில்லை என்றும் இப்போது திரையுலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நடிக்க வந்த புதிதில் எனக்குப் பாடவும் தெரியும் என்று சொன்னதும் எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். எனினும் அப்போது பல்வேறு திறமை உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
"ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. பன்முகத் திறமை உள்ளவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக் கின்றன. திறமை உள்ளவர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள்," என்கிறார் ஷ்ருதி.

