திரையுலகில் தமது பயணத்தை ஒரு மாயாஜாலம் என வர்ணிக்கிறார் நடிகை சாய் பல்லவி.
முன்னணி நடிகையான பிறகும்கூட எளிமையாக, நட்பாக நடந்துகொள்பவர் என்று திரையுலகத்தினரும் அதற்கு வெளியே உள்ளவர்களும் சாய் பல்லவியைப் புகழ்கின்றனர். அவ்வாறு இருப்பது தம் இயல்பு என்கிறார் அவர்.
"என்னைப் பெரிய நடிகை என்று கூறத் தொடங்கி உள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நான் இன்னும் பழைய சாய் பல்லவிதான். என் மனதளவில் நான் இன்னும் மாறவில்லை.
"ரசிகர்களின் அன்பு என்னை நெகிழ வைக்கிறது. ஆனால் என்னைப் புகழ்கிறார்கள் என்பதற்காக எனது இயல்புகளை மாற்றிக்கொள்வது சரியாக இருக்காது. என்னைப் பற்றி நானே உயர்வாக கருதிக்கொள்வதில்லை," என்று பக்குவமாகப் பேசும் சாய் பல்லவி நடிப்பில், தற்போது 'கார்கி' படம் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு சவாலான கதாபாத்திரங்களில் நடித்து முடித்திருப்பவர், இனி மகிழ்ச்சிகரமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் சாய் பல்லவி.
"குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக நான் திரையுலகில் அறிமுகமானதாகக் கருதுகிறேன். அதனால்தான் எனது திரைப்பயணத்தை மாயாஜாலங்கள் நிறைந்தது என்கிறேன்.
"நான் நடிக்க வேண்டிய சில கதைகள் காத்திருப்பதாக உணர்கிறேன். அவற்றில் நான் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
"ஒரு திரைப்படம் எந்த அளவுக்கு எனக்குத் தேவையோ, அதேபோன்று அந்தக் கதைக்கு நானும் தேவை என்று நினைக்கிறேன். எனக்கான வாய்ப்புகளைத் தேடுவதில்லை. அவை தாமாக அமைகின்றன.
"புது வாய்ப்புகள், போட்டிகள் குறித்து எல்லாம் யோசிக்கத் தொடங்கினால், அதற்காக வியூகம் அமைந்தால், அதன் பிறகு நடிப்பு என்ற கலையில் முழு மனதுடன் ஈடுபட இயலாது. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது," என்கிறார் சாய் பல்லவி.
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது, அதில் தனக்கான கதாபாத்திரம் குறித்து மட்டுமே யோசிப்பதில்லை என்றும் படம் பார்ப்பவர்களால் அந்தக் கதையுடன் பொருத்திக்கொள்வதற்கான அம்சங்கள் உள்ளனவா என்று மட்டுமே தாம் கவனிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது, அதன் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு சில நாள்கள் ஆகிறது என்று சொல்லும் சாய் பல்லவி, தன் மனதுக்குள் புகுந்துவிட்ட கதாபாத்திரங்களை தாம் வலிய துரத்தி அடிப்பதில்லை என்கிறார்.
"நாள்களின் போக்கில் அவை தன்னால் மறைந்துவிடுகின்றன. இவ்வாறு முழு அர்ப்பணிப்புடன் நடிக்கும்போது ஏற்படும் மனநிறைவு அலாதியானது. அதேசமயம் கனமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும்போது ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளாகிறேன். அவை ஏற்படுத்தும் மனச்சோர்வை நினைத்துப் பார்க்கும்போது, சிறிய இடைவெளி தேவைப்படுவதாக நினைக்கிறேன்.
"மீண்டும் ஓரிரு படங்களில் சராசரி நாயகியாக நடிக்க திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் என்னை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க முடியும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
"படப்பிடிப்பின்போது நான் ஜாலியாக சிரித்துப் பேச வேண்டும். அதற்கு உதவி செய்யும் கதைகளே எனது தேர்வாக இருக்கும்," என்று சொல்லும் சாய் பல்லவி, ஒரு படத்தில் நடிக்கத் தொடங்கும் முன்பு அதற்கான கதையை தனது தலையில் முழுமையாக ஏற்றுக் கொள்வாராம்.
அதன் பிறகு தனக்கான கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பது என்றும் திட்டமிடுவாராம். இந்த நடைமுறைதான் தம்மை முன்னணி நடிகையாக முன்னேற வைத்துள்ளது என்கிறார்.
அண்மையில் சில விவகாரங்கள் குறித்து சாய் பல்லவி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. எனினும் இதுபோன்ற காரணங்களுக்காக தம்மால் வாய்மூடிக்கிடக்க இயலாது என்கிறார்.
"எனது கருத்துகள் யார் மனதையேனும் புண்படுத்தி இருக்கிறது எனில் அதற்காக நிச்சயம் மன்னிப்பு கேட்பேன். நான் உண்மை என நம்பக்கூடிய விஷயங்கள் குறித்து மட்டுமே பேசுகிறேன்.
"எல்லோருமே முன்னேற்றத்தை நோக்கியே பணியாற்றுகிறோம். எனது தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தும்போது, நான் குறிப்பிட்ட ஒரு தரப்பை ஆதரிப்பதாகவோ மக்களை பிரிப்பதாகவோ கருதக்கூடாது.
"அதேசமயம் எனக்குப் புரியாத விஷயங்கள் குறித்து நான் வாய் திறப்பதே இல்லை," என்று தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசுகிறார் சாய் பல்லவி.
"நான் திரையுலகில் நடிக்கத் தொடங்கி ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அமைந்தன.
"பல நண்பர்கள் கிடைத்தனர். என் நடிப்பை நியாயமான முறையில் விமர்சித்துப் பாராட்டுபவர்கள், அறிவுரை கூறுபவர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். இந்தப் பயணம் இதேபோன்ற இனிமையுடனும் நல்ல அனுபவங்களுடனும் நீடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை," என்கிறார் சாய் பல்லவி.
, :

