'சேது' படம் பெரிய வெற்றியைப் பெற்றபோதும், அதன் நாயகி அபிதாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் வேறு வழியின்றி, தொலைக்காட்சி பக்கம் ஒதுங்க நேரிட்டது.
சஞ்சீவ், அபிதா இருவரும் 'திருமதி செல்வம்' தொலைக்காட்சித் தொடருக்கு கிடைத்த வரவேற்பு தமக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளித்ததாக சொல்லும் அபிதா, அந்த தொடர் தன் வாழ்க்கையை மாற்றி அமைத்ததாகவும் கூறுகிறார்.
"'சேது' படத்தில் நடிக்கும் முன்பு என்னை வீட்டில் ஜெனி என்றுதான் அழைப்பார்கள். ஆனால் 'சேது' படம் வெற்றி பெற்ற பிறகு தமிழ் ரசிகர்களைப் போலவே என் வீட்டாரும் அபிதா என்று அழைக்கத் தொடங்கினர்.
"அதன் பிறகு 'திருமதி செல்வம்' தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் ஏற்று நடித்த அர்ச்சனா கதாபாத்திரம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்ததால் செல்லும் இடங்களில் எல்லாம் அர்ச்சனா என்றே அழைக்கத் தொடங்கினர்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தத் தொடரில் நடிப்பதற்கு என்னை ஒப்பந்தம் செய்ய இயக்குநர் குமரன் தேடி வந்தபோது அந்த வாய்ப்பை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை. அவர் வீட்டுக்கு வந்த சமயத்தில், தலைக்கு எண்ணெய் வைத்து, ஜடை பின்னி, கிராமத்துப் பெண் போல் காட்சியளித்தேன்.
"கதையை விவரித்த பிறகு கிளம்பிய இயக்குநர், மறுநாள் படப்பிடிப்புக்கு 'இதே தோற்றத்தில் வாருங்கள்' என்றார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக ஒரு தொடரை நடித்த வகையில் நன்கு சம்பாதித்து வீட்டுக் கடன்களை எல்லாம் தீர்த்தேன்.
"'சேது' படத்தில் நடித்தபோது அறவே நடனமாடத் தெரியாது. அதனால் படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலா கடுமையாக திட்டிவிட்டார். அதனால் ஒரு நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன். அப்போது என் அக்கா, பாரதிராஜா போன்ற இயக்குநர்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் அடித்துவிடுவார்கள் என்றும் வெறும் திட்டுக்காக அழுவது தேவையற்றது என்றும் கூறினார்.
"மறுநாள் பாலா சாரிடம் மன்னிப்பு கேட்டேன். 'உங்கள் நல்லதுக்காகத்தான் ஏசினேன்' என்றார்.
"ஆனாலும், படம் வெளியான பின்னர் சிறப்பு காட்சி திரையிட்டபோதும் செய்தியாளர் சந்திப்பின்போதும் அவர் என்னை அழைக்கவில்லை. அதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை.
"என்னைப் புறக்கணிக்கும் அளவுக்கு என்ன செய்தேன் என்பது குறித்து இதுவரை நானும் அவரிடம் கேட்டதில்லை. அவரும் இது பற்றி எந்தவிதமான விளக்கமும் அளித்ததில்லை," என்று சொல்லும் அபிதா, இப்போது மாரி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.

