தமிழில் அறிமுகமாகும்போதே, முன்னணி நாயகிகளை முந்திவிட்டார் என்று ஸ்ரீநிதி ஷெட்டியை வியப்பாகப் பார்க்கின்றனர் கோடம்பாக்கத்தில் விவரம் அறிந்தவர்கள்.
விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தில் இவர்தான் கதாநாயகி. ஆனால் தமிழில் நடிக்கும் முதல் படத்துக்காக இவர் பெற்ற சம்பளத்தின் மூலம் நயன்தாராவையே மிஞ்சிவிட்டார் என்பதுதான் நயன் ரசிகர்களை அதிர வைக்கும் தகவல்.
பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் 'கேஜிஎஃப்' இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உலகளவில் வசூலில் அசத்தியது. தயாரிப்பாளர் முதலீடு செய்ததைவிட பத்து மடங்கு வசூலானது.
'கேஜிஎஃப்' படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தைப் பிடித்து, உச்சத்துக்குப் போய்வி்ட்டார் ஸ்ரீநிதி.
கன்னடத்தில் இரண்டாவது படத்தில் நடிப்பதற்கே இரண்டு கோடி ரூபாய் கேட்க, தயாரிப்பாளர்களும் மறுபேச்சு பேசாமல் கேட்டதைக் கொடுத்துள்ளனர். அதன் பிறகுதான் 'கோப்ரா' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது ஸ்ரீநிதிக்கு பேசப்பட்ட தொகை மூன்று கோடி ரூபாய். ஆனால் படம் முடிவதற்குள் அது ஆறு கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டதாகத் தகவல்.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும், தமிழில் நடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என ஸ்ரீநிதி தரப்பு தகவல் பரப்பி உள்ளதாக கோடம்பாக்கத்தில் விவரம் அறிந்தவர்கள் கூறு கின்றனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி உலக முழுவதும் வெளியீடு காண்கிறது 'கோப்ரா' படம். அதற்குள் ஸ்ரீநிதியை புதுப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்தால் மட்டுமே சம்பளத்தைக் கொஞ்சம் குறைப்பாராம். இல்லையெனில் அடுத்த படமும் வெற்றிபெறும் பட்சத்தில் அவரது சம்பளம் ஆறு கோடி ரூபாய்க்கு கீழே குறையாது என்கிறார்கள்.
சரி, 'கோப்ரா' படம் குறித்து பார்ப்போம்.
"இதில் ஸ்ரீநிதி ஷெட்டி முதல் முறையாக விக்ரமுக்கு ஜோடியாகி உள்ளார்.
தவிர மிர்ணாளினி, மியா ஜார்ஜ் ஆகியோரும் உள்ளன. மூன்று நாயகிகள் என்றாலும் தமது கதாபாத்திரத்துக்குதான் முக்கியம் அளிக்கப்பட்டுள்ளது என்கிறார் ஸ்ரீநிதி.
"இயக்குநர் எதை எதிர்பார்ப்பாரோ, அதைக் குறைவின்றித் தரக்கூடியவர் ஸ்ரீநிதி. 'கேஜிஎஃப்' படத்தை பார்த்த உடனேயே, அவர்தான் எங்கள் படத்தின் நாயகி என்பதை முடிவு செய்துவிட்டோம்.
"விக்ரம், ஸ்ரீநிதி ஜோடிப் பொருத்தம் சிறப்பாக இருக்கும். இருவருக்கும் இடையேயான உடல்மொழி, இருவரது நடிப்பு எல்லாமே படத்துக்குப் பலம் சேர்க்கும் அம்சங்கள்," என்கிறார் 'கோப்ரா' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து.
பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளார் ஸ்ரீநிதி. மாடலிங் துறையிலும் மிகவும் பிரபலம்.
பெற்றோர் இருவருமே கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். பொறியியல் படிப்பில் நிறைய மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற ஸ்ரீநிதிக்கு அழகிப்போட்டிகளில் பங்கேற்கும் ஆசை சிறு வயது முதலே உண்டாம். படிப்பை முடித்த பிறகு வீட்டில் எதிர்ப்பு ஏதும் இல்லாததால், தாம் ஆசைப்பட்ட துறையில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார்.
"அழகிப் போட்டிகளில் பங்கேற்பது பெருமைக்குரிய விஷயம் மட்டுமல்ல, அதன் மூலம் நமது தன்னம்பிக்கையும் வளரும்.
"பல்வேறு தரப்பட்டவர்களை சந்திக்கவும் உலக அளவிலான விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.
"சினிமாவைப் போன்று அழகிப் போட்டிகளையும் என்னால் கைவிட இயலாது," என்கிறார் ஸ்ரீநிதி ஷெட்டி.
, :

