'கோலமாவு கோகிலா' படம் இந்தியில் 'குட்லக் ஜெர்ரி' என்ற தலைப்பில்
மறுபதிப்பாகிறது. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட்டுள்ளனர். இதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள போதிலும், படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இயக்குநர் சீனு ராமசாமிக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் கௌரவ முனைவர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வர்த்தகப் பல்கலைக்கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஜூலை 23ஆம் தேதி அதற்கான நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு தமக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.
இதையடுத்து, அண்மையில் ரஜினி வீட்டுக்கு நேரில் சென்று அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற பின்னர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இப்படம் வெற்றி அடைய மனதார வாழ்த்துவதாக ரஜினி கூறினாராம்.
தெலுங்கில் வெளியாகி, பெரிதாகப் பேசப்பட்ட 'புஷ்பா' படம், வசூலில் மட்டுமல்லாமல், சத்தமின்றி இன்னொரு சாதனையையும் படைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியீடு கண்ட இப்படத்தின் பாடல்கள், இணையத்தில் யூடியூப் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சுமார் ஐந்து பில்லியன் பார்வை களைப் பெற்றுள்ளதாகவும் இந்தியாவில் வேறு எந்த திரைப்படமும் இச்சாதனையைப் புரிந்ததில்லை என்றும் அப்படக் குழு தெரிவித்துள்ளனர்.
விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்துக்காக, ஒரு சண்டைக் காட்சியை பிரம் மாண்டமான முறையில் படமாக்க உள்ளனர்.
இதற்காக கடந்த 1990களில் காட்சியளித்த சென்னை அண்ணா சாலையைப் போன்ற அரங்கு ஒன்று அமைக்கப் பட்டுள்ளதாம். இந்த அரங்கும் சண்டைக்காட்சியும் ரசிகர் களை அசரவைக்கும் என்கிறது படக்குழு.

