ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள தெலுங்குப் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா. '105 மினிட்ஸ்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள அந்தப் படம் 105 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாகி உள்ளது.
இந்தப் படம் வெளியான பிறகு தம்மை 'பொம்மைக் கதாநாயகி' என்று சிலர் விமர்சிப்பது முடிவுக்கு வரும் என்கிறார் ஹன்சிகா.
படத்தில் வசனங்கள் குறைவாம். முகபாவனைகள் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளதாகவும் தமது திரையுலகப் பயணத்தில் தாம் ஏற்று நடித்த சவாலான கதாபாத்திரம் இதுதான் என்றும் சொல்கிறார்.
"தமிழை நான் ஓரங்கட்டிவிட்டதாக சிலர் பேசுகிறார்கள். அது உண்மையல்ல. தமிழ் இயக்குநர்கள் சிலரது திறமையை நம்பி கதை கேட்காமலேயே நடித்திருக்கிறேன்.
"அதேசமயம் மனதுக்குப் பிடிக்காமல் எந்தப் படத்திலும் நடித்ததில்லை. தமிழில் நான் நடித்த பல படங்கள் இப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவைதான். அவற்றில், 'எங்கேயும் காதல்', 'ரோமியோ ஜூலியட்', 'வேலாயுதம்', 'போகன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களில் மிகவும் ரசித்து நடித்திருக்கிறேன். வீட்டில் ஓய்வாக இருக்கும்போது இந்தப் படங்களை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன்," என்கிறார் ஹன்சிகா.
தமது ஐம்பதாவது படமான 'மஹா'வை வெளியிடுவது தொடர்ந்து தள்ளிப்போனது வருத்தம் அளித்தாலும், திரையுலகில் இதுபோன்ற பிரச்சினைகளும் பின்னடைவும் ஏற்படுவது இயல்புதான் என்கிறார் ஹன்சிகா. இந்தப் படத்தில் சிம்பு நடிக்க முன்வந்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுவதாகவும் பாராட்டுகிறார்.
"நாயகியை முன்னிலைப்படுத்தும் படத்தில் சிம்பு போன்ற முன்னணி நாயகன் நடிப்பது பெரிய விஷயம். சிம்பு நல்ல கதைகளை மதிப்பவர். அவர் நடித்துள்ளதைத் தவிர 'மஹா'வில் மேலும் பல சிறப்புகள் உள்ளன. இது எனது 50வது படம். இதுவரை நான் கனமான கதாபாத்திரங்களில் நடித்ததில்லை. முதல்முறையாக அப்படியொரு வேடத்தில் நடித்திருக்கிறேன்.
"இது ஒரு தாய்க்கும் மகளுக்குமான கதை. மிகவும் துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு என்னை வெறும் பொம்மை நாயகி என்று யாரும் சொல்லமாட்டார்கள்; மாறாகப் பாராட்டுவார்கள்," என்று சொல்லும் ஹன்சிகா இன்னும் சென்னையில் சொந்த வீடு வாங்கவில்லை.
சொந்த ஊரான மும்பையில் இருந்து அவ்வப்போது சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் பறந்து வந்து படப்பிடிப்பில் பங்கேற்றுச் செல்கிறார்.
"தமிழ்நாடு என்னைக் கொண்டாடும் தேசம். இங்கே நான் விருந்தாளி மட்டும்தான் என்பதை உணர்ந்துள்ளேன். விருந்தாளி என்பவர் அவருக்குரிய பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த மும்பையை விட்டு வரச் சொல்கிறீர்கள் எனில், அது இயலாத காரியம்.
"நான் சிறுமியாக இருந்தபோது விளம்பரங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினேன். இந்தப் பயணத்தை தொடங்கி 19 ஆண்டுகள் ஆகின்றன.
"வெளியிலிருந்து பார்க்கும் பலருக்கும் இது சாதனைபோல் தோன்றலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. இதுவொரு தொடக்கம் என்று மட்டுமே நினைக்கிறேன். இப்போது என்னுடைய 60ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு எனது படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
"நான் ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் பெண் அல்ல. ஆனால், அவ்வாறு இருப்பதற்கு கொரோனா கிருமி கற்றுக் கொடுத்தது.
"கொரோனா முடக்க நிலையின்போது நிறைய விஷயங்கள் குறித்து நன்கு, விரிவாக சிந்திக்கவும் செய்தேன்.
"தொற்றுக் காலம் முடிவுக்கு வந்ததுமே வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகவேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக, அதிக படங்களில் நடிக்கவேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறேன்," என்கிறார் ஹன்சிகா.
திரையுலகுக்கு அப்பால் தம்மை ஓர் ஓவியர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதில் எப்போதுமே பெருமை கொள்வதாகக் குறிப்பிடுபவர், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தூரிகையை கையில் எடுத்தால், மளமளவென்று பல ஓவியங்களைத் தீட்டிவிடுவாராம். வீட்டில் தமக்கென ஓவியக்கூடம் ஒன்றை அமைத்துள்ளார்.
"அந்தக் கூடத்துக்குள் நுழைந்துவிட்டால் என்னையே மறந்துவிடுவேன். 24 மணிநேரமும் வண்ணங்களோடு இருக்கச் சொன்னால், அதற்கு நான் தயார்," என்கிறார் ஹன்சிகா.

