ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் இருந்து கால்ஷீட் ஒதுக்க முடியாத காரணத்தால் விலகி உள்ளார் விஜய் சேதுபதி. கார்த்தி நடித்த 'விருமன்', 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக உள்ளன. இதை யடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இதில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பார் எனக் கூறப்பட்டது. எனினும் கால்ஷீட் பிரச்சினைகளால் இந்தப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் எனத் தெரியவந்துள்ளது.
அருள்நிதி நாயகனாக நடிக்கும் 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் பிரியா பவானி சங்கர். இதை அப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 'களத்தில் சந்திப்போம்' படத்தில் அருள்நிதியுடன் இணைந்து நடித்துள்ளார் பிரியா. வரும் ஆகஸ்ட் மாத மத்தியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்குள் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'கோப்ரா' வெளியாகி இருக்கும்.
'பிரமாஸ்திரா' படத்தில் இடம்பெற்றுள்ளது 'தீத்திரியாய் மூலமாக' என்ற பாடல். மதன் கார்க்கி வரிகளில் சித்ஸ்ரீராம் குரலில் ஒலிக்கும் இப்பாடல் இளையர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில், 'தீத்திரியாய்' பாடலை தமது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார் படத்தின் நாயகி ஆலியா பட். மேலும், "தீத்திரியாய் மூலமாக எங்கள் காதலின் ஓசை இப்போது உங்களுக்கும் கேட்கும்," என்று தமிழில் குறிப்பிட்டுள்ளர். அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் 'பிரமாஸ்திரா'. இதில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

