பிருத்விராஜ் சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து நடிப்பில் முத்திரை பதித்துள்ள சில நடிகர்களில் அவரும் ஒருவர்.
தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ள அவர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், 'கடுவா' என்ற படைப்பை அளித்துள்ளார். உணர்வுபூர்வமான, அடிதடிகள் நிறைந்த காட்சிகளுடனும் விறுவிறுப்பான திரைக்கதையுடனும் உருவாகி உள்ளது இப்படம்.
மென்மையாகத் தோற்றமளிக்கும் பிருத்விராஜா இப்படியொரு படத்தில் நடித்துள்ளார் என மலையாளத் திரையுலகினர் வியக்கிறார்கள். 'கடுவா' என்றால் புலி என்று அர்த்தமாம்.
"ரசிகர்கள் சிலர் நினைப்பதுபோல் நான் அவ்வளவு மென்மையான ஆள் அல்ல. என் படங்கள் இப்படித்தான் இருக்கும் என யாரும் முடிவு செய்துவிடக்கூடாது.
"இதை மனதிற்கொண்டுதான் படத்தை இயக்க முடிவு செய்தேன். 'ஜனகனமன', 'ப்ரோடாடி', 'கடுவா', 'கோல்ட்' ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை உருவாக்கியதுதான் அவற்றின் வெற்றிக்குக் காரணம்.
"இயக்குநர், நடிகர் என்ற வகையில் தொடர் வெற்றிகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 'கடுவா' படமும் எனக்குப் புத்துணர்ச்சி தரும் படைப்பாக அமைந்தது. சமூகத்திற்கு தேவையான நல்ல கதைகள் மலையாளத்தில் படமாக்கப்படுகின்றன. இத்தகைய காலகட்டத்தில் நானும் ஜனரஞ்சகமான ஒரு படைப்பை அளித்துள்ளேன். இதுதான் புலிப் பாய்ச்சல்," என்கிறார் பிருத்விராஜ்.
சரி.... 'கடுவா' படத்தின் கதை என்ன?
"கடந்த 1990ல் கேரளாவில் உள்ள கோட்டயம் அருகே பாலா என்ற இடத்தில் நடந்த உண்மைச் சம்பவம்தான் 'கடுவா' கதை. கதாநாயகனின் மீசை, மலையாளிகளுக்கே உரிய வேட்டி என எல்லாமே 1990ல் நடந்ததை கண்முன் கொண்டுவரும்.
"கடந்த 2009ஆம் ஆண்டிலேயே இந்தப் படம் குறித்து இயக்குநர் ஷாஜி கைலாஷிடம் பேசி இருந்தேன். அப்போது அவர் திரையுலகை விட்டு சற்றே தள்ளி இருந்தார்.
"முதலில் கதையைப் படியுங்கள், பிறகு படம் இயக்குவது குறித்து பேசலாம் என்றேன். அவரும் என் மீதுள்ள மரியாதை காரணமாக கதையைப் படித்துப் பார்த்துள்ளார். அதன் பின்னர் படத்தை இயக்க சம்மதித்தார்.
"என்னைப் பொறுத்தவரை ஷாஜி கைலாஷின் பல்வேறு வெற்றிப் படங்களில் 'கடுவா' முதன்மையானது என்பேன்," என்று சொல்லும் பிருத்விராஜ், சொந்த நிறுவனம் மூலம் சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.
'டிரைவிங் லைசென்ஸ்' படம் வெற்றிபெற்றதை அடுத்து, 'ஜனகனமன', 'கடுவா', 'கோல்ட்' என அவர் தயாரித்துள்ள படங்கள் வசூலில் அசத்தி வருகின்றன. அடுத்து இந்தியில் அக்ஷய் குமார் நடிக்கும் படம் தயாரிப்பில் உள்ளது.
"தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி, தயாரிப்பீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். எனக்கு கோடம்பாக்கத்திலும் பல நண்பர்கள் உள்ளனர். நான் கதாநாயகர்களுக்காக படம் எடுக்கும் தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்ல.
"ஒரு கதை எழுதிய பிறகே யாரை வைத்து வேலைகளைத் தொடங்கலாம் என முடிவு செய்வேன். கதைக்கு யார் பொருத்தமோ அவரிடம் பேசுவேன். அந்த நடிகருக்கு கதை பிடித்திருந்தால் அடுத்த கட்டத்துக்குச் செல்வேன்.
"எல்லாம் சரியாக அமைந்தால் அஜித் தொடங்கி சிவகார்த்தி கேயன் வரை யார் வேண்டுமானாலும் என் படங்களில், இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்புண்டு. அவர்களை நானே நேரடியாக அணுகிப் பேசுவேன்," என்கிறார் பிருத்விராஜ்.
தமிழில் நடிக்கக் கேட்டு சில வாய்ப்புகள் தேடிவந்தபோதும், நல்ல கதைகள் அமையவில்லை என்று சொல்பவர், தமிழில் தற்போது பிரம்மாண்ட, வெற்றிப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வியப்பளிப்பதாகச் சொல்கிறார்.
"மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து நேரத்தை ஒதுக்கி, கதை பண்ணும் அளவுக்கு, ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, கதைகள் தேடி வருவதற்காக காத்திருக்கிறேன்.
"தற்போது பெரிய எழுத்தாளர்கள், படைப்பாளிகள்கூட நடிக்கத் தொடங்கி உள்ளனர். அண்மைய மலையாளத் திரைப்படங்கள் மற்ற மொழிகளைச் சேர்ந்தவர்களாலும் அதிகம் கவனிக்கப்படுகிறது. மிக விரைவில் தமிழ் ரசிகர்களை வித்தியாச மான கதையோடு சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது," என்கிறார் பிருத்விராஜ்.
, :
பிருத்விராஜ்

