தமிழ்த் திரையுலகில் ஒரு திரைப்படத்துக்கு கதை எவ்வளவு முக்கியமோ, அதற்கு இணையான முக்கியத்துவம் அதன் தலைப்புக்கும் அளிக்கப்படுகிறது.
ஒரு படத்தின் தலைப்பே அதன் வெற்றியில் பாதியைத் தீர்மானித்துவிடுகிறது என்று தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பெரும்பாலானோர் நம்புகின்றனர்.
எதற்காக இந்த முன்னுரை என்கிறீர்களா?
"அண்மைக்காலமாக முன்னணி நடிகர்களின் புதுப்படங்களுக்கு 'வி' என்ற ஆங்கில எழுத்தில் துவங்குவதுபோன்று தலைப்பு வைக்கிறார்கள். தற்போது 'வாரிசு', 'விருமன்', 'வணங்கான்', 'வெந்து தணிந்தது காடு', 'வாத்தி' ஆகிய தலைப்புகளின் முதல் எழுத்து வி என்று அமைந்துள்ளது. படத் தலைப்புதானே, எப்படி இருந்தால் என்ன என்று இவ்விஷயத்தை ஒதுக்கிவிட முடியாது.
"கதையை மெருகேற்றுவதற்கென ஒரு குழுவை அமைத்து, கதை விவாதம் நடத்துவது கோடம்பாக்கத்தில் வழக்கமான ஒன்று. இதற்காகப் பல லட்சங்கள் செலவிடப்படும். இந்தக் குழுவைப் போன்ற பலர் ஒன்று சேர்ந்து ஒரு தலைப்பை தேர்வு செய்ய மெனக்கெடுவார்கள்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
குறைந்தபட்சம் மூன்று தலைப்புகளை இறுதி செய்து, இந்தக் குழு படத்தின் கதாநாயகனின் கவனத்துக்கு கொண்டு செல்லும். அதன் பிறகு இயக்குநரும் நாயகனுமாகச் சேர்ந்து ஒரு தலைப்பை தேர்வு செய்கின்றனர்.
எந்தத் தலைப்பும் ஒத்துவரவில்லை எனில், பழைய படங்களின் தலைப்பை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அந்த வகையில் அண்மையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப் படத்துக்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது ரஜினி நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படத்தின் தலைப்பு.
இவ்வாறு, 'பில்லா', 'படிக்காதவன்', 'பொல்லாதவன்' என்று ரஜினி நடித்த இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட படங்களின் தலைப்பை மீண்டும் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் ரஜினி எதற்கும் தடைவிதித்ததில்லை.
"தலைப்புதான் ரசிகர்களை முதலில் சென்றடைகிறது. அது அவர்களின் கவனத்தை ஈர்க்கும்விதமாக அமைந்தால்தான், அந்தப் படம் குறித்து வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து படிப்பார்கள். அதனால்தான் தலைப்பை முடிவு செய்வதற்கு தாமதமாகிறது.
"விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படப்பிடிப்பை தொடங்கிய பிறகே தலைப்பை அறிவிக்கிறார்கள். அதுவரை விஜய், 66, அஜித் 67 என்று நாயகர்களின் பெயரை வைத்தே ஒரு படத்தை அடையாளப்படுத்துகிறார்கள்," என்று கோடம்பாக்க விவரப்புள்ளிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதேசமயம் கதைக்கு ஏற்ற மாதிரியும் ஒரு தலைப்பு இருக்கவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் கதைப்படி அவர் ஒரு பெரிய குடும்பத்தின் வாரிசாக வலம் வருவாராம். அவரது குடும்பத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களை எவ்வாறு முறியடிக்கிறார் என்கிற ரீதியில் கதை நகருமாம்.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வணங்கான்' படம் அடிதடி நிறைந்த படமாக உருவாவதாகத் தகவல். எதற்கும் யாருக்கும் வணங்காதவன் என்று பொருள்படும்படி இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது 'வெந்து தணிந்தது காடு'. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்துள்ள படம் இது. முழுநீள அடிதடிப் படமாக இதை உருவாக்கி உள்ளாராம் கௌதம் மேனன்.
தனுஷ் நடிப்பில் உருவாகும் நேரடித் தெலுங்கு படம் 'வாத்தி'. முன்னணி தெலுங்கு இயக்குநர் வெங்கி அல்லூரி இயக்குகிறார். தெலுங்கில் 'சார்' என்றும் தமிழுக்கு 'வாத்தி' என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.
கதைப்படி ஆசிரியராக நடிக்கிறார் தனுஷ். கடந்த 1980களில் நடக்கும் கதையாக உருவாகும் இப்படத்தில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இதில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி நாயகியாக நடித்துள்ளார். ஆகஸ்ட் 31ஆம் தேதி படம் வெளியீடு காண்கிறது.
சூர்யா
, :

