திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
e5a1d6a9-55ab-4861-88a6-ef1e22e4d6ba
-
multi-img1 of 2

 "தனுஷ் ஒரு நம்ப முடியாத சிறந்த நடிகர்," என்று பாராட்டி உள்ளார் ஹாலிவுட் நடிகர் ரியான் காஸ்லிங். இருவரும் 'தி கிரே மேன்' படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படக்குழுவினர் தனுஷை வெகுவாகப் பாராட்டி உள்ளனர். "தனுஷ் சிறந்த நடிகர். சில சண்டைக் காட்சிகளை நாங்கள் படமாக்கியபோது, அவர் சிறு தவறுகூட செய்ய வில்லை. சில காட்சிகளை பல தடவை மீண்டும் படமாக்கிய போதும் அவரது நடிப்பில் எந்தக் குறையும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை தனுஷ் மிகவும் வேடிக்கையான மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதனால் திரையில் அவரை எதிரியாக நினைத்து நடிப்பது வருத்தமாக இருந்தது," என்கிறார் ரியான் காஸ்லிங்.

 இனி வித்தியாசமான கதாபாத்திரங்களில் கவனம் செலுத்துவது என முடிவு செய்துள்ளாராம் சமந்தா. அந்த வகையில் விஜய்யின் 67வது படத்தில் வில்லியாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல். தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்தப் படத்தில்தான் சமந்தாவை ஒப்பந்தம் செய்ய உள்ளனர். கைதி, பட பாணியில் இந்தப் படத்தை உருவாக்க உள்ளாராம் லோகேஷ். இதற்கு முன்பு தெறி, மெர்சல், கத்தி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. இந்நிலையில், முதன்முறையாக அவர் விஜய்க்கு வில்லியாக உள்ளார்.

 கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது '19(1)(a)'. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். மலையாளம், தமிழ் என இருமொழிகளில் இப்படம் திரைகாண்கிறது. அறிமுக இயக்குநர் இந்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆண்டோ ஜோசப் பிலிம் நிறுவனம் தயாரிக்க கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் என்ற சுவடு அறவே தெரியாத வகையில் படத்தை இயக்கி உள்ளதாக இந்துவைப் பாராட்டி உள்ளார் விஜய் சேதுபதி.