'எனக்கு சாதி வெறி இல்லை'

'எனக்கு சாதி வெறி இல்லை'

3 mins read

பார்த்­தி­பன் இயக்­கி­யுள்ள 'இர­வின் நிழல்' படம் மூலம் தமிழ் சினிமா ரசி­கர்­கள் மத்­தி­யில் பிர­ப­ல­மா­கி­விட்­டார் பிரி­கிடா. இந்­தப் படம் குறித்து கல­வை­யான விமர்­ச­னங்­கள் வெளி­வ­ரு­கின்­றன.

எனி­னும் பார்த்­தி­பன் அனைத்து விமர்­ச­னங்­க­ளை­யும் பக்­கு­வ­மாக எதிர்­கொண்டு வரு­கி­றார். இந்­நி­லை­யில், பிரி­கிடா அளித்த பேட்டி ஒன்று சர்ச்­சை­யாகி உள்­ளது.

இதற்­காக அவர் மன்­னிப்பு கோரி­யது ஒரு­பக்­கம் இருக்க, பார்த்­தி­ப­னும் தனது வருத்­தத்தை சமூக ஊட­கங்­களில் பதிவு செய்­துள்­ளார்.

'இர­வின் நிழல்' படத்­தில் இடம்­பெற்­றுள்ள சில வச­னங்­கள் குறித்து சமூக ஊட­கங்­களில் விவா­தம் நடந்து கொண்­டி­ருந்த வேளை­யில், இது­போன்ற விஷ­யங்­களை சினி­மா­வில் தவிர்க்க முடி­யாது என்று பிரி­கிடா தன் பேட்­டி­யில் குறிப்­பிட்­ட­து­தான் சிக்­க­லுக்கு விதை­போட்­டது. அவ­ருக்கு எதி­ராக பல­ரும் குரல் கொடுத்­த­து­டன், சாதி வெறி­பி­டித்­த­வர் பிரி­கிடா என்­றும் அவ­ரைக் கைது செய்ய வேண்­டும் என்­றும் ஒரு தரப்­பி­னர் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், தமக்கு சாதி வெறி இருப்­ப­தாகக் கூறு­வது மிகுந்த வேதனை அளித்­தி­ருப்­ப­தாகக் கூறு­கி­றார் பிரி­கிடா.

"நான் யார் மன­தை­யும் புண்­ப­டுத்த வேண்­டும் என்று நினைக்­க­வில்லை. நான் அவ்­வ­ளவு பெரிய நடி­கை­யும் அல்ல. 'இர­வின் நிழல்' படத்­தில் சில முக்­கி­ய­மான காட்சிகள் ஒரு குடி­சைப் பகு­தி­யில் பட­மாக்­கப்­பட்­டுள்­ளன. அதன் பிறகு வேறு சில இடங்­களும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

"இதை ரசி­கர்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தும் நோக்­கத்­தோடு, குடி­சைப்­ப­கு­தி­யில் எடுக்­கப்­பட்ட வச­னங்­களும் காட்­சி­களும் 'ராவாக' இருக்­கும் என்று தெரி­யா­மல் சொல்­லி­விட்­டேன்.

"இதற்­காக சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் என்னை மன்­னிக்க வேண்­டும். குறிப்­பிட்ட ஓரி­டத்தை மட்­டும் சொன்­ன­தால் பலர் வேத­னை­ய­டைந்­துள்­ள­னர். அவர்­கள் என்னை மன்­னிப்­பார்­கள் என்ற நம்­பிக்கை உள்­ளது.

"நான் அனை­வ­ருக்­கும் உத­வும் பெண். யார் மன­தை­யும் நோக­டிக்­க­மாட்­டேன். ஆனால் பேசத்­தெ­ரி­யா­மல் பேசி­ய­தால் இப்­ப­டி­யா­கி­விட்­டதே என்று நினைக்­கும்­போது வருத்­த­மாக உள்­ளது," என்­கி­றார் பிரி­கிடா. இவ­ரது தந்தை சமூக ஆர்­வ­லர். மாண­வர்­க­ளுக்கு மன­நல ஆலோ­ச­னை­களை வழங்கி வழி­காட்­டு­ப­வ­ரா­க­வும் உள்­ளார். எல்­லா­ரும் சமம் என்­பதை சிறு வய­தி­லேயே தன் தந்தை தமக்கு புரிய வைத்­த­தா­க­வும் பிரி­கிடா சொல்­கி­றார்.

பிரி­கி­டாவை கைது செய் என்ற வாச­கம் டுவிட்­ட­ரில் வேக­மா­கப் பர­வி­ய­தைக் கண்டு தாம் கண்­ணீர் விட்­டுக் கத­றி­ய­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், தாம் தமிழ்த் திரை­ உ­ல­கில் நாய­கி­யாக அறி­மு­க­மா­ன மகிழ்ச்சியை முழு­தாக ஒரு­நாள் கூட கொண்­டாட முடி­ய­வில்லை என்­கி­றார்.

"பூர்வக் குடி­களை நான் அவ­மா­னப்­ப­டுத்­தி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்­கள். நான் சென்னை பல்­லா­வ­ரம் பகு­தி­யை­ச் சேர்ந்­த­வள். பூர்­வ­க்கு­டி­மக்­களில் எனக்கு ஏரா­ள­மான நண்­பர்­கள் உள்­ள­னர். அவர்­கள் மிக­வும் அன்­பா­ன­வர்­கள். அவர்­க­ளி­டம் இருந்து நிறைய கற்­றுக்­கொண்­டேன்.

"அவர்­கள் உண்­மையை மட்­டுமே பேசக்­கூ­டி­ய­வர்­கள். மன­தில்­பட்ட கருத்­து­களை முகத்­துக்கு நேரா­கப் பேசு­வார்­கள். இதை­யெல்­லாம் பார்த்து வளர்ந்த நான் எப்­படி அவர்­க­ளைத் தாழ்த்­திப் பேசு­வேன்?" என்று பதில் கேள்வி எழுப்­பு­கி­றார் பிரி­கிடா.

இதற்­கி­டையே படத்­துக்கு விளம்­ப­ரம் தேடும் நோக்­கத்­தி­லேயே பிரி­கிடா இவ்­வாறு பேசி­ய­தா­கக் கூறப்­ப­டு­வதை அவர் திட்­ட­வட்­ட­மாக மறுக்­கி­றார். மலி­வான விளம்­ப­ரம் தேடும் அள­வுக்கு இர­வின் நிழல் மோச­மான படைப்­பல்ல என்­றும் இது உல­கத் தரத்­தி­லான படைப்பு என்­றும் கூறுகிறார்.

"பிறர் மன­தைப் புண்­ப­டுத்தி விளம்­ப­ரம் தேட வேண்­டும் என நான் நினைத்­ததே இல்லை. என் திற­மை­யின் மூல­மா­கவே எனக்­கான பாராட்­டு­கள் வந்து சேர வேண்­டும் என விரும்­பு­கி­றேன்.

"இப்­ப­டி­யெல்­லாம் பேசி­விட்­டீர்­களே... கொஞ்­சம் விரி­வா­கப் பேசி இருக்­கக்­கூ­டாதா' என்று பார்த்­தி­பன் சார் மிக­வும் வருத்­தப்­பட்­டார்.

"வெளிப்­ப­டை­யா­க­வும் உண்­மை­யா­க­வும் சொல்­கி­றேன். எனக்கு சாதி வெறி கிடை­யாது. சேரி என்ற வார்த்­தை­யைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­காக வருத்­தப்­ப­டு­கி­றேன்," என்­கி­றார் பிரி­கிடா.