காயத்ரி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியான வண்ணம் உள்ளன. அண்மையில் வெளியீடு கண்ட 'விக்ரம்' படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்திருந்தார் காயத்ரி. பின்னர் அவர் நாயகியாக நடித்த 'மாமனிதன்' படம் வெளியானது. இதையடுத்து மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் ஜோடியாக நடித்து வரும் 'நின்ன தான் கேஸ் கொடு' என்ற தலைப்பில் உருவாகியுள்ள படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில், தான் நடித்த படங்கள் மாதத்திற்கு ஒன்றாக வெளியாகி வருவதில் உற்சாகமாகி இருக்கிறாராம் காயத்ரி. எல்லாருக்கும் இப்படியொரு வாய்ப்பும் தொடர்ச்சியும் அமைந்துவிடாது என்றும் சொல்கிறாராம்.
கேளிக்கை விடுதிகள், பிரம்மாண்ட விழாக்கள், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோரை 'பவுன்சர்' என்று குறிப்பிடு கிறார்கள். இப்படிப்பட்ட பாதுகாவல் பணியில் பெண்களும் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், இந்தப் பெண் 'பவுன்சர்'களின் வாழ்க்கையை விவரிக்கும் விதமாக 'பப்ளி பவுன்சர்' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார். மதூர் பண்டார்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது என்றும் செப்டம்பர் 23ஆம் தேதி படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமன்னா பெண் பவுன்சராக நடித்திருக்கிறார். ஒரு கோடீஸ்வரரின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்படும் ஒரு பெண்ணின் கதையை அடிதடியும் நகைச்சுவையும் கலந்து சொல்லி இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தின் காணொளிப் பதிவை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒளிபரப்பப் போவதாகக் கூறப்பட்டது. எனினும், திருமணம் முடிந்த பிறகு இருதரப்புக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் எதிரொலியாக திருமண காணொளியை அந்நிறுவனம் வெளியிடப் போவதில்லை என்றும் தகவல் வெளியானது. அனைத்தையும்விட, இந்தக் காணொளி உரிமையைப் பெற அந்நிறுவனம் 25 கோடி ரூபாய் கொடுத்ததாக வெளியான தகவல் அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. இந்நிலையில், அந்தத் தனியார் நிறுவனம் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன்தாரா திருமணப் புகைப் படங்களை அந்தத் தனியார் ஓடிடி நிறுவனம் சமூக ஊட கங்களில் வெளியிட்டுள்ளது. மேலும், அவர்களது திருமண காணொளி விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.
லெஜண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' படத்தை உலகம் முழுவதும் சுமார் 2,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். வரும் 28ஆம் தேதி அப்படம் வெளியாகிறது.
இதன் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.பி.இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற உலக நாடுகளிலும் இந்த நிறுவனமே இப்படத்தை வெளியிடும். இதற்காகப் பெருந்தொகை கைமாறியுள்ளதாகத் தகவல். அந்த வகையில், அறிமுக நாயகன் ஒருவரது படத்தின் விநியோக உரிமை அதிக தொகைக்கு விலை போயுள்ளது. மேலும், அதிகமான திரையரங்குகளிலும் வெளியாகி சாதனை படைக்க உள்ளதாக இப்படக்குழுவினர் கூறுகின்றனர்.

