சிறந்த நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார் சூர்யா. 'சூரரைப் போற்று' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
இன்று சூர்யாவுக்கு 47வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில், நேற்று அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கிடைத்த மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசு இந்த விருது என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர். சூர்யாவின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த முறை தமிழ் திரையுலகுக்கு பத்து தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் 'சூரரைப் போற்று' படத்துக்கு மட்டும், வெவ்வேறு பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
சூர்யாவைத் தவிர, இப்படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த திரைக்கதை, சிறந்த படம் ஆகிய பிரிவுகளிலும் 'சூரரைப் போற்று' திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்தப் படம், கொரோனா நெருக்கடி காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
சூர்யாவின் '2டி எண்டெர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
குறைந்த கட்டண விமான நிறுவனத்தைத் தொடங்கி சாதித்துக் காட்டிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது.
இந்தப் படத்துக்காக ஒட்டுமொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்ததாக சூர்யா தன் பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த உழைப்புக்கு தகுந்த பரிசு கிடைத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா நெருக்கடியால் குறைந்த எண்ணிக்கையிலான படங்கள் மட்டுமே வெளியாகின.
அந்த ஆண்டு எட்டு மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. எனினும், முப்பது மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கான போட்டியில் பங்கேற்றன. அவற்றைப் பரிசீலித்து சிறந்த படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழில் சிறந்த படமாக, இயக்குநர் வசந்த் இயக்கிய 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் தேர்வாகி உள்ளது. மேலும், இப்படத்தில் பணியாற்றிய ஸ்ரீதர் பிரசாத்துக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதும் லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளைத் தழுவி இயக்குநர் வசந்த் இப்படத்தை இயக்கி உள்ளார். மூன்று விருதுகளைப் பெற்றுள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க, வசந்தே தயாரித்திருநதார். இந்தப் படமும் ஓடிடி தளத்தில்தான் வெளியானது.
சிறந்த வசனத்திற்கான தேசிய விருது 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.
'மண்டேலா' படத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேர்தலில் வாக்களிக்க பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தும் கதைக்களத்துடன் மிக சுவாரசியமான படத்தை ரசிகர்களுக்குத் தந்து பாராட்டு பெற்றார் மடோனா அஸ்வின்.
தெலுங்கில் வெளியான 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றுள்ளார் தமன். இதேபோல் சிறந்த இயக்குநருக்கான விருது 'அய்யப்பனும் கோஷியும்' மலையாளப் படத்தை இயக்கிய காலஞ்சென்ற கே.ஆர்.சச்சிதானந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ள அபர்ணா பாலமுரளிக்கும் சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிறப்பாக நடித்திருந்த போதிலும், சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.
இந்நிலையில், அண்மையில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக 'வீட்ல விசேஷம்' படத்தில் நடித்திருந்தார்.
, :

