'இழப்பு ஏற்படக் கூடாது'

'இழப்பு ஏற்படக் கூடாது'

3 mins read
6e13f8db-2b9a-4e82-899d-5613029e3a7c
-

தாம் நடிக்­கும் படத்தை, அதில் சொல்­லப்­பட்­டி­ருக்­கும் கதைக்­காக ரசி­கர்­கள் பார்க்கவேண்­டுமே தவிர, தனக்­காகப் பார்க்கக்கூடாது என்­பதே தனது கொள்கை என்­கி­றார் அருள்­நிதி. இதை மன­தில் வைத்­துக் கொண்­டு­தான், தாம் நடிக்­கும் கதை­க­ளைத் தேர்வு செய்­வ­தாக அவர் கூறு­கி­றார்.

அருள்­நிதி நடிப்­பில் தற்­போது வெளி­யாகி உள்ள படம் 'தேஜாவு'. இது­வும் ஒரு திகில் கதை­தான்.

ஏன் திகில் படங்­களில் மட்­டுமே நடிக்­கி­றீர்­கள் என்று கேட்­ப­வர்­க­ளுக்கு, தாம் இதற்­காக மெனக்­கெ­ட­வில்லை என்­றும் தேடி வரும் கதை­கள் அவ்­வாறு அமை­வ­தா­க­வும் சொல்­கி­றார் அருள்­நிதி.

"நான் திரை­யில் நடிக்­கத் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகி­விட்­டன. தொடக்­கம் முதலே கதைத் தேர்­வில் மிகுந்த கவ­னத்­து­டன் இருக்­கி­றேன். என்­னைப் பொறுத்­த­வரை இரண்டு மணி­நே­ரம் ஓடக்­கூ­டிய படத்­தில் நான் 30 நிமி­டங்­கள் மட்­டுமே திரை­யில் தோன்­றி­னா­லும் பர­வா­யில்லை. ஆனால், அந்­தக் கதை ரசி­கர்­களை திருப்தி­ப­டுத்த வேண்­டும் என்பது மட்­டுமே எனது நோக்­க­மாக இருந்து வந்­துள்­ளது.

"அண்­மை­யில் வெளி­யான 'டி பிளாக்', இப்­போது வெளி­யாகி உள்ள 'தேஜாவு' ஆகிய இரு படங்­க­ளுமே திகில் வகையைச் சார்ந்­த­வை­தான். அது மட்­டு­மல்ல. நான் தற்போது நடித்து வரும் 'டைரி' பட­மும்­கூட திகில் வகை­தான்.

"ஆனால், ஒவ்­வொரு படத்­துக்­கும் இடையே நிச்­ச­யம் ஒரு வேறு­பாடு இருக்­கும். மேலும், கதைக்­க­ளங்­களும் வித்தி­யா­ச­மாக இருக்­கும்­படி பார்த்­துக்­கொள்­கி­றேன். இந்த அம்­சம்­தான் எனது கதைத் தேர்வு கச்சி­த­மாக அமைய முக்­கிய கார­ண­மாக உள்­ளது," என்று சொல்­லும் அருள்­நிதி, திரை­யில்­தான் இறுக்­க­மான மனி­த­ரா­கக் காட்சி அளிக்­கி­றார், அள­வோடு பேசு­கி­றார்.

ஆனால் நிஜத்­தில் மனி­தர் வாயைத் திறந்­தால் நகைச்­சு­வை­தான். அவர் இருக்­கும் இடம் கல­க­லப்­பாக இருப்­பதை உறுதி செய்­கி­றார்.

"நான் ஏற்­கும் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­காக முரட்டு மனி­த­னைப் போல் திரை­யில் காட்சி அளிக்கவேண்­டிய கட்­டா­யம் ஏற்படு­கிறது. உண்­மை­யில் நான் கல­க­லப்­பா­கப் பேசக்­கூ­டி­ய­வன். 'டி பிளாக்' படத்­தில் நடித்­த­போது மேலும் இள­மை­யாக உணர்ந்­தேன். காரணம், அப்­ப­டிப்­பட்ட இள­மை­யான படக்­குழு அமைந்­தது.

"இந்­தப் படத்­தின் கதையை மொத்­த­மாக எழுதிக் கொடுத்­தி­ருந்­தார் இயக்­கு­நர். பாதி கதை­யைத் தாண்டு­வ­தற்­குள், அதன் முடிவை அறி­யும் ஆர்­வம் ஏற்­பட்­டது. உடனே அவ­ரைத் தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு மீத­முள்ள காட்­சி­களை விளக்­கிச் சொல்­லு­மாறு கேட்­டேன்.

"இது­போன்ற படக்­கு­ழுக்­கள் அமை­வ­தும் புது இயக்கு­நர்­க­ளும்­தான் எனது வளர்ச்­சிக்கு முக்­கிய கார­ணம். அவர்­கள் மீது முழு நம்­பிக்கை வைத்து, அவர்­கள் கூறும் கதை­களில் நடித்­தேன். ஓடும் குதிரை மீது­தான் பந்­த­யம் கட்­டு­வார்­கள். இதை நான் எப்­போ­தும் மறப்­ப­தில்லை," என்­கி­றார் அருள்நிதி.

இன்­றைய தேதி­யில் தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­முக இயக்கு­நர்­க­ளுக்கு அதி­க­மான வாய்ப்­பு­கள் தந்­தி­ருப்­பது இவர்­தான்.

'மௌன குரு' படம் தொடங்கி, 'டிமான்டி காலனி' படங்­கள் வரை புது­மு­கங்­கள்­தான் இவரை இயக்கி உள்­ள­னர். அந்­தப் படங்­கள் அனைத்­துமே விமர்­சன, வசூல் ரீதி­யில் வர­வேற்பு பெற்­றவை.

"பெரிய, அனு­பவ இயக்­கு­நர்­கள் என்னை அணு­கி­ய­தில்லை. நானும் அவர்­களை நாடிச் சென்­ற­தில்லை. அவர்­கள் யாரே­னும் எனக்கு வாய்ப்பு அளித்­தால் நடிக்­கத் தயார்.

"அதே சம­யம் என்னை வைத்து படம் இயக்­கும்­போது, அந்த இயக்­கு­நர்­க­ளுக்கு 'பட்­ஜெட்' பிரச்­சினை ஏற்­ப­டக்­கூ­டும். ஒரு­வேளை அதன் கார­ண­மாக என்னை அணு­கா­மல் இருந்­தி­ருக்­கக்­கூ­டும்.

"எனி­னும், திரை­யு­ல­கில் பத்து ஆண்­டு­க­ளைக் கடந்­து­விட்ட நிலை­யில், எனது வட்­டத்தை விரி­வு­ப­டுத்த வேண்­டும் என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றேன். 'தேஜாவு', 'டைரி' ஆகிய படங்­கள் என்னை அடுத்த கட்­டத்­துக்கு அழைத்­துச் செல்­லும் என நம்புகிறேன்.

"எது எப்­படி இருந்­தா­லும், என்னை நம்பி பணத்தை முத­லீடு செய்­யும் தயா­ரிப்­பா­ளர் எந்த வகை­யி­லும் நஷ்­டம் அடை­யக்­கூ­டாது என்­ப­தில் கவ­ன­மாக இருப்­பேன். எனது அடுத்­த­கட்ட நகர்­வு­கள் இந்த அடிப்­ப­டை­யில்­தான் இருக்­கும்," என்று அக்­க­றை­யு­டன் பேசு­கி­றார் அருள்­நிதி.

அடுத்து, 'டிமான்டி காலனி' படத்­தின் இரண்­டாம் படத்­தில் நடிக்க திட்­ட­மிட்­டி­ருக்­கி­றா­ராம்.

அஜய் ஞான­முத்­து­தான் இதை­யும் இயக்க உள்­ளார் என்று கூறப்­பட்­டது. ஆனால், அவ­ரி­டம் உத­வி­யா­ள­ராக இருந்த வெங்கி வேணு­கோ­பால்­தான் இயக்­கப் போகி­றா­ராம்.

"அறி­முக இயக்­கு­நர்­க­ளின் உழைப்­பும் அர்ப்­ப­ணிப்­பும்­தான் நான் இன்­றுள்ள இடத்தை அடைய முக்­கிய கார­ணம். அதற்­காக அவர்­கள் அனை­வ­ருக்­கும் கட­மைப்­பட்­டுள்­ளேன்.

"எனது அடுத்­த­டுத்த படங்­களில் சில சோதனை முயற்­சி­கள் இருக்­கும். எனி­னும், அத­னால் யாருக்­கும் இழப்போ பிரச்­சி­னையோ ஏற்­ப­டாது," என்கிறார் அருள்நிதி.

, :   