சிறு வயதில் இருந்தே தமக்கு நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு என்கிறார் இளம் நாயகி கிரித்தி ஷெட்டி.
அதைப் புரிந்துகொண்டு பெற்றோர் தம்மை நடனப் பள்ளியில் சேர்த்ததாகச் சொல்கிறார்.
'தி வாரியர்' படத்தில் இடம்பெற்றுள்ள புல்லட், விசில் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் சினேகாவுக்கு அடுத்து சிரிப்பழகிப் பட்டம் கிரித்தி ஷெட்டிக்குத்தான் என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் அவரோ, தம்மைவிட சிறப்பாக நடனமாடக்கூடிய திரைக்கலைஞர்கள் இருப்பதாக தன்னடக்கத்துடன் சொல்கிறார்.
"பயிற்சி இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் என்னைப்போல் நடனமாட முடியும். என் நடனத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேசமயம் இந்தப் பாராட்டு எனக்கு மட்டுமே உரித்தானது அல்ல. எனக்கு அந்த நடன அசைவுகளைக் கற்றுக்கொடுத்த நடன அமைப்பாளருக்கும் என்னுடன் பாடல்களுக்கு நடனமாடிய கலைஞர்களுக்கும் பாராட்டுகளில் பங்குண்டு," என்கிறார் கிரித்தி.
நடனத்தில் மட்டுமல்ல, இவர் சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையும்கூட. பள்ளி நாள்களில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளாராம். அதேபோல் படிப்பிலும் படுசுட்டியாம்.
"ஐந்தாம் வகுப்பு முடிக்கும் வரை மருத்துவராக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதற்கேற்ப அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றுவிடுவேன். அப்பாவும் அம்மாவும் எனக்கு ஊக்கம் அளித்தனர்.
"ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஆறாம் வகுப்புக்கு வந்ததும் மருத்துவர் ஆசையைக் கைவிட்டேன். மாறாக, நடனத்தின் மீது ஆர்வம் திரும்பியது. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அதன் பிறகு மாடலிங் துறையிலும் கால்பதித்தேன்.
"சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. இளம் வயதிலேயே சினிமா மூலம் இந்த அளவுக்குப் புகழ் கிடைக்கும் என்றும் நினைக்கவில்லை. விதி குறித்து வீட்டுப் பெரியவர்களும் மற்றவர்களும் பேசும்போதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் அவர்களைப் புறக்கணிப்பேன். ஆனால், இப்போது விதியை நம்பலாம் என்று தோன்றுகிறது," என்று சொல்லும் கிரித்தி ஷெட்டி, தற்போது சைக்காலஜி துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வருகிறார்.
மனோதத்துவம் படித்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று நம்புவதாகச் சொல்பவர், தனித்திறமைகள் மேலும் மேம்படும் என்கிறார்.
"மனிதர்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் நான் சைக்காலஜி படிப்பதாகச் சொல்வது தவறு. இந்தப் படிப்பின் மூலம் ஒருவர் தனது தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும் என நம்புகிறேன். மருத்துவ ரீதியாக மனோதத்துவம் படிப்பது வேறு. என் நோக்கம் அதுவல்ல. தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், தனித்திறன்கள் மேம்பாடு ஆகியவற்றைக் கற்றுத்தரும் படிப்பையே நான் நம்புகிறேன்," என்கிறார் கிரித்தி.
இவருக்குப் பிடித்த தமிழ் நடிகர் கார்த்தி. இப்போது விஜய் சேதுபதிக்கும் ரசிகையாகிவிட்டார். தெலுங்கில் வெளியான 'உப்பண்ணா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்துள்ளார் கிரித்தி.
"நான் கார்த்தியின் தீவிர ரசிகை. 'பையா' படத்தில் தொடங்கி அவரது நடிப்பை வெகுவாக ரசிப்பேன். அதேபோல் இந்தி, தெலுங்கு, தமிழில் வெற்றிபெறும் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவேன். அப்படித்தான் 'பீட்ஸா' படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பை முதன் முதலில் பார்த்தேன்.
"அதன் பிறகு, 'விக்ரம் வேதா'வில் அவரது நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். அவருக்கே மகளாக நடிப்பேன் என்று நினைக்கவில்லை. 'உப்பண்ணா' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 15 பக்கம் வசனம் உள்ளது. அதை வேகமாகப் பேசியபடியே அவரது முகத்தைப் பார்த்து நடிக்க வேண்டும். பலமுறை முயன்றும் சரியாக நடிக்க முடியவில்லை.
"இதனால், பதற்றமாக உணர்ந்தேன். அப்போது விஜய் சேதுபதிதான் என்னை ஆசுவாசப்படுத்தி எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அதை மறக்கவே முடியாது," என்று சொல்லும் கிரித்தி, தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'வணங்கான்' படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

