பிரபலமாக உள்ள நடிகைகளின் பட்டியலில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த 'மேக்ஸ் ஸ்டார் இந்தியா' என்ற அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆலியா பட் இரண்டாம் இடத்திலும் நயன்தாரா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். காஜல் அகர்வால், தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ், கேத்ரினா கைஃப், கியாரா அத்வானி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் அனுஷ்காவுக்குப் பத்தாம் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா இடம்பெறாதது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதனால், இந்தப் பட்டியலை ஏற்க இயலாது என்றும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சத்தமில்லாமல் மூன்று படங்களில் நடித்து வருகிறார் பூர்ணா. அவற்றுள் தெலுங்கில் நானியுடன் நடிக்கும் 'தசரா' படம் தன் திரைப்பயணத்தில் முக்கியமானது என்கிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் பூர்ணாதான் வில்லி. இதற்கு முன்பு 'அகண்டா' என்ற தெலுங்குப் படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்தவர், இப்போது எதிர்மறைப் பாத்திரத்தில் நடிக்க கூடுதல் சம்பளம் பெற்றிருப்பதாகத் தகவல். தமிழில் மிஷ்கின் இயக்கியுள்ள 'பிசாசு-2', தெலுங்கில் உருவாகியுள்ள 'பேக் டோர்' ஆகிய படங்களின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள பூர்ணாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள முதல் இந்திப் படம் 'குட் பை' எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியீடு காண்கிறது. இதனால் அவர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளாராம். "இந்தியில் நான் நடித்துள்ள முதல் படம் திரைகாண்பதில் மகிழ்ச்சி. அதைவிட, அமிதாப் பச்சன் என்ற பெரும் கலைஞருடன் இணைந்து நடித்த படம் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. எட்ட முடியாத உயரத்தில் உள்ள சாதனையாளர் அவர். ஆனால் மிக எளிமையான மனிதராகப் பழகுகிறார். அவருடன் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் சம்பளம் வாங்காமல் கூட நடிக்கத் தயார்," என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'வாடிவாசல்' படத்திற் காக அவர் மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட காணொளியை அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது வெற்றிமாறன் இயக்கும் படம்.
'ஜல்லிக்கட்டு' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னையின் புறநகர்ப் பகுதியில் இந்தப் படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, சூர்யா காளைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில், காணொளியும் இப்போது வெளியாகி உள்ளது. காளைகளை எவ்வாறு அணுக வேண்டும், அவை பாய்ந்து வரும்போது எப்படித் தப்பிக்க வேண்டும் என்பன போன்ற நுணுக்கங்களை மாடுபிடி வீரர்கள் சூர்யாவுக்குக் கற்றுத் தரும் காட்சிகள் இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளன.

