பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்.
சிறுநீரகம், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகர்கள் தனுஷ், சரத்குமார், சிரஞ்சீவி உள்ளிட்டோர் தமக்கு உதவி செய்ததால்தான் தம்மால் உரிய சிகிச்சை பெற முடிந்தது என்றும் தற்போது உடல்நலம் தேறி உள்ளது என்றும் கூறுகிறார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பொன்னம்பலம். தமக்கு உடல்நிலை சரியில்லாத போது உதவிய சினிமா பிரமுகர்கள் குறித்து அண்மைய பேட்டியில் அவர் மனம் திறந்துள்ளார்.
"விஜயகாந்த் எனக்கு கடவுள் போன்றவர். அவரை இன்னும் நேரில் சந்திக்கவில்லை. அவர் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளேன்.
"அவரது உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேரில் சந்தித்தால் என் மனம் தாங்காது. நான் அந்த நொடியே இறந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
"இப்போது நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால் அவர்தான் எனக்கு முதல் நபராக உதவி இருப்பார்," என்கிறார் பொன்னம்பலம்.
"சரத்குமார் சார் இரக்க குணம் படைத்தவர். நான் பல மாதங்களாக வீட்டு வாடகையைச் செலுத்த முடியவில்லை. அதைக் கேள்விப்பட்டு, அவரே வாடகையைச் செலுத்தினார்.
பிரகாஷ்ராஜை ஒருமுறைதான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். உடனே இரண்டு லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தார். நடிகர் சிரஞ்சீவி பெரிய மனிதர். என் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அறிந்து இரண்டு லட்சம் ரூபாயை அனுப்பியதுடன். ஆறுதல் கூறி ஒலிப்பதிவு ஒன்றையும் அனுப்பினார்.
"தனுஷ் என் மானத்தைக் காப்பாற்றியவர். சரியான நேரத்தில் எனக்கு சில உதவிகளைச் செய்தார். அவரையும் எனக்கு உதவிய அனைவரையும் நான் மகான்கள் என்றுதான் சொல்வேன்," என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் பொன்னம்பலம்.
இவர்களுக்கு எல்லாம் தாம் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் உடல்நலம் முழுமையாகத் தேறிய பின்னர் திரையுலகில் நீடிப்பது குறித்து முடிவெடுக்கப் போவதாகவும் கூறுகிறார்.
இதற்கிடையே இவர் முழுமையா கவும் விரைவாகவும் உடல் நலம் தேற ரசிகர்கள் சமூக ஊடங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

