திரைத் துளிகள்

திரைத் துளிகள்

3 mins read
8c54e6d9-387d-4197-a878-ddb1e8d05b11
-
multi-img1 of 3

 காலஞ்சென்ற இந்திய அதிபர் அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்று அங்கு அவரின் குடும்பத்தாரை சந்தித்துப் பேசியுள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. தாம் அப்துல் கலாமின் தீவிர ரசிகை என்றும் அவரது அறிவாற்றலும் அமைதியான செயல்பாடும் தமக்கு ரொம்பப் பிடிக்கும் என்றும் கூறுகிறார். "திடீரென ராமேசுவரத்தில் உள்ள கலாம் ஐயா வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. உடனே கிளம்பிச் சென்றேன். அந்த வீட்டில் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும் என் வாழ்க்கையில் மிக முக்கியான தருணம்," என்கிறார் சஞ்சிதா.

 தம்மைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால், உடனே சம்பந்தப்பட்டவரின் கன்னத்தில் அறைவேன் என்கிறார் நடிகை ரெஜினா. துணிச்சல் என்பது எங்கோ வெளியில் இருந்து பெற வேண்டிய விஷயம் அல்ல என்றும் அது நமக்குள்ளேயே உள்ளது என்றும் அண்மைய பேட்டியில் அவர் கூறியுள்ளார். பள்ளி நாள்களிலேயே தாம் இதைப் புரிந்து கொண்டதாகவும் சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டுள்ளார். "நான் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. எனக்கு கோபம் வந்தால் என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. பள்ளி நாள்களில் மட்டும் இன்றி கல்லூரியிலும், சினிமா துறைக்கு வந்த பிறகும் என்னைத் தவறாக பேசியவர்களை கோபம் வந்து அடித்து இருக்கிறேன். எனது கோபத்திற்கு பின்னால் அகம்பாவம் இருக்காது. உரிய காரணம் இருக்கும்," என்கிறார் ரெஜினா.

 வெற்றிக்கும் புகழுக்கும் நிச்சயம் ஒரு விலை இருக்கும் என்கிறார் நடிகை டாப்சி. நடிகையான பிறகு தன் வீட்டுக் கதவுகளை திறந்து கொண்டு வெளியே சென்றால் தம் மீது எத்தனையோ கண்கள் பதிந்து இருக்கும் என்பதை உணர்ந்து உள்ளதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். "என்னைக் கணிக்க எத்தனையோ பேர் தயாராக இருப்பார்கள். எனது ஒவ்வொரு அசைவையும் கவனிப்பார்கள். நான் நான்கு சுவர்களுக்கு வெளியே சிறு தவறு செய்தாலும் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பு அதிகம். அதனால் தான் கவனமாக இருக்கிறேன். எனக்கு சில வெற்றிகள் கிடைத்துள்ளன. ஆனால் இந்த வெற்றிகளுக்காக நான் கொடுத்த விலை மிக அதிகம்," என்கிறார் டாப்சி. திரைத்துறைக்கு வந்த புதிதில் தமக்கு வழிகாட்ட மூத்தவர்கள் யாரும் இல்லை என்றும் திரையுலகில் யாரையும் தெரியாது என்பதால் தன் மனம் சொல்லியபடி நடந்து கொண்டதாகவும் டாப்சி கூறியுள்ளார்.

 தமது அண்மைய புகைப் படத்தைப் பார்த்து மோசமாக விமர்சித்த பெண்ணுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு. உடல் பெருத்திருந்த குஷ்பு அண்மையில் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டதன் பலனாக இப்போது ஒல்லியாக மாறியுள்ளார். தனது அண்மைய புகைப்படங்களை அவ்வப்போது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ரேகா என்பவர், குஷ்புவின் அண்மைய புகைப்படத்தைப் பார்த்த பின்னர், "அழகாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி, தோல் திருத்தங்களைச் செய்ய வேண்டும்," என்று பின்னூட்டமிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு. "நீங்கள்தான் சிகிச்சைக்கு காசு கொடுத்தீர்களா, பிறரைத் துன்புறுத்தி கிடைக்கும் மகிழ்ச்சியை வைத்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்பது தெரியவில்லை. உன்னைப் பற்றி நினைத்தால் அவமானமாக உள்ளது," என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.