உலகம் முழுவதும் சுமார் 2,500 திரைகளில் வெளியாகிறது 'தி லெஜண்ட்' திரைப்படம். தமிழ், தெலங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் படத்தை வெளியிட உள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரில் இப்படத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஊர்வசி ரௌடேலா கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதை பெருமையாகக் கருதுவதாகவும் தரத்தில் எந்தவித சமரசத்துக்கும் இடம் அளிக்காத வகையில் தென்னிந்திய கலைஞர்கள் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியில் அறிமுகமான இவர் பின்னர் கன்னடத்தில் உருவான 'ஐராவதா' படத்தின் மூலம் தென்னிந்தியாவில் அறிமுகமானார்.
"அந்தப் படம் எனக்கு நல்லதொரு தொடக்கத்தை அளித்தது எனலாம். தர்ஷன் நாயகனாக நடித்திருந்தார். 'ஐராவதா' நல்ல அனுபவத்தையும் நினைவுகளையும் என் மனதில் விட்டுச் சென்று்ளளது.
"இந்நிலையில் மீண்டும் பெங்களூரு வந்திருப்பது உற்சாகம் அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை 'தி லெஜண்ட்' படமும் நேரடி கன்னடப் படம்தான்," என்கிறார் ஊர்வசி.
அதிக சம்பளம் கொடுத்ததன் காரணமாக 'தி லெஜண்ட்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுவதை ஏற்க இயலாது என்று குறிப்பிட்ட அவர், முழுக் கதையையும் கேட்ட பிறகே நடிக்க முன்வந்ததாகத் தெரிவித்தார்.
"இந்தப் படத்தில் எனக்கு சண்டைக் காட்சிகளும் உள்ளன. மேலும் நடனத்துக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளனர். அனைத்தையும்விட எனது நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
"இயக்குநர்கள் ஜெடி, ஜெர்ரி இருவருமே எதையும் தெளிவாகத் திட்டமிட்டுச் செய்யக்கூடியவர்கள். தரம் என்று வந்துவிட்டால் எந்தவித சமரசத்துக்கும் உட்படமாட்டார்கள்.
"தென்னிந்திய கலைஞர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். நடிகர்கள் தங்களுக்கான கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார்கள். என்னைக் கவர்ந்த விஷயங்களில் இது மிகவும் முக்கியமானது.
"இவ்வாறு கடினமாக உழைக்கும் கலைஞர்களைப் பார்க்கும்போது நமக்கும் ஒருவித ஊக்கமும் தன்னம்பிக்கையும் ஏற்படும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகமும் சிறந்த உதாரணம்," என்கிறார் ஊர்வசி.
தனக்கென சில கனவுக் கதாபாத்திரங்கள் இருப்பதாகக் குறிப்பிடுபவர், எந்த மொழியில் அந்தக் கதாபாத்திரங்கள் அமைந்தாலும் நடிக்கத் தயார் என்கிறார்.
"இளவரசியாக நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. மேலும், படை வீராங்கனையாகவும் நடிக்க விரும்புகிறேன்.
"வாழ்க்கையில் பெரிதாகச் சாதித்த பெண்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இடம்பெற வேண்டும் என்பதும் எனது விருப்பம். இறுதியாக, மிகச்சிறந்த காதல் படைப்பில் நடிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.
"தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன். அதேபோல் கன்னடத்தில் யாஷ், உபேந்திராவுடன் நடிக்கும் ஆசையும் உண்டு," என்கிறார் ஊர்வசி ரௌடாலா.
இந்தியில் தாம் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் மிக விரைவில் அங்கும் சவாலான கதாபாத்திரங்கள் அமையும் என நம்புகிறாராம்.
முன்பெல்லாம் இந்தியில் சம்பளம் அதிகம், படப்பிடிப்பு மெதுவாக நடைபெறும் என்பார்கள். இப்போது இந்திக்கு நிகராக தென்னிந்திய படங்களிலும் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. அதனால்தான் இந்தி நடிகைகள் பலரும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் தென்னிந்திய படங்களின் இந்தி மறுபதிப்பில் நடிக்கவும் விரும்புகிறார்கள்," என்கிறார் ஊர்வசி.

