44வது உலக சதுரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் இன்று (28.07.2022) மாலை நடைபெறுகிறது.
அந்த நிகழ்ச்சியில் பிரதமர், தமிழ் நாடு ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள். இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா மூன்று அணிகள் களமிறங்குகின்றன.
இதனை முன்னிட்டு போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது செஸ் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு. அனைத்து செஸ் போட்டியாளர்களும் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என ரஜினிகாந்த் வெளியிட்ட தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் செஸ் விளையாடுவது போல் ஒரு புகைப்படத்தையும் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

