"பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலையும் சமூகத்தின் மனநிலையும் எப்படி இருக்கும் சட்டம் எவ்வளவு தூரம் உறுதுணையாக உள்ளது என்பதுதான் 'பொம்மை நாயகி' படத்தின் கதைக்கரு," என்கிறார் இயக்குநர் ஷான்.
இவரது தந்தை சமூக உணர்வுள்ள களப்பணியாளராக இருந்தவர். ஷானும் அவருடன் பணியாற்றி உள்ளார்.
"குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக அக்கறையோடு வேலை செய்தவர் என் தந்தை. வலியும் வேதனையுமான நினைவுகளாக அந்த அனுபவங்கள் அப்படியே மனதில் தேங்கி நிற்கின்றன. அதனாலதான் அப்படி பாதிக்கப்பட்ட சிறு பெண்ணின் கதையைத் தேர்ந்தெடுத்தேன்," என்கிறார் ஷான்.
பார்வையாளனின் கவனத்தை முழுவதுமாக தனக்குள் கிரகித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் திரைக்கலையின் முதல் விதி என்று சுட்டிக்காட்டும் இந்த அனுபவ இயக்குநர், தாமும் அதைப் பின்பற்றி உள்ளதாகச் சொல்கிறார்.
"குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து நிறைய கேள்விப்படுகிறோம். ஆனால் சிலர் இதில் குழந்தைகளின் தவறும் இருக்கிறது எனச் சொல்லிவிடுகிறார்கள். வன்முறைக்குப் பிறகு அதோடு குழந்தையின் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. அவர்களின் மீதான வன்முறைக்கு தண்டனை தரும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சரியாகப் பயன்படுத்துவது தவறு செய்தவர்கள் தான்.
"குழந்தைகளின் மனநிலையைத் தாண்டி, இதில் பெற்றோர் மனநிலையும் பார்க்கப்படுகிறது. குழந்தைகள்மீதான வன்முறையை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். நான் சொல்ல வந்தது அதற்கான சட்டங்கள், சமூகத்தின் பார்வை ஆகியவற்றுக்கு மத்தியில், குழந்தையை ஒரு சாமானியன் எப்படி மீட்டெடுத்தான் என்பதே கதைக்களம்.
"அப்பாவிகளான அவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? இதுவும் கதையின் அடிப்படை. அதுவும்போக, இது அப்பாவுக்கும் பெண்ணுக்குமான ஒரு பயணம். தண்டனை என்பது அந்தக் காலத்தில் காலம்கடந்து கிடைக்கும் என்பார்கள். இப்போதெல்லாம் கைமேல் பலன். ஒரு நல்ல தகப்பனின் பரிதவிப்பும் மேன்மையும் இதில் இருக்கிறது," என்று உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் ஷான்.
இதில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக நடித்திருப்பவர் யோகிபாபு.'மண்டேலா' படம் வெளியாகும் முன்பே, அவர் மீது நம்பிக்கை வைத்து நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
"பலரிடம் இந்தக் ததையைச் சொல்லி இருக்கிறேன். அப்போதெல்லாம் யோகியின் நினைவு வரவில்லை. எழுதும்போதுகூட மனதில் யோகி இல்லை. அவரின் புகைப்படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த முகத்தில் நகைச்சுவை தவிர பல பரிமாணங்கள் இருப்பதாகத் தோன்றியது. யோகியுடன் பேசினேன்.
"நிச்சயம் அர்ப்பணிப்பான நடிப்பு. இப்படியொரு யோகிபாபுவை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அதை உணரமுடியும்.
"பெண்ணுக்குத் தன் காலடி நிழல்கூட சொந்தமில்லாதபோது ஆண் குழந்தைக்கு பெரிய திடலையே அளிக்கிறார்கள். பெண் மீதான வன்முறையும் அதன் பின்னான வாழ்க்கையும் இதில் அலசப்படுகிறது," என்கிறார் ஷான்.

